திருப்பந்தணை நல்லூர் (பந்தநல்லூர்)

இறைவர் : பசுபதிநாதர்
இறைவி : காம்பனதோளி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தலமரம் : சரக்கொன்றை

கோயில் பெரிது. 5 நிலை இராசகோபுரம். இங்கு திருவாயில்கள் சமயாசாரியாரின் திருப்பெயரால் வழங்கும். முதலாவது திருநாவுக்கரசு நாயனார் திருவாயில். அதனைக் கடந்து உட்சென்றால், இரண்டாவதாக இருப்பது திருஞானசம்பந்தர் திருவாயில். கோயிலின் நீராழி மண்டபத்தோடு கூடிய திருக்குளம். சட்டநாதர் சந்நிதி கட்டுமலைமேல் அழகாக இருக்கிறது. இறைவர் சுயம்பு (புற்று). பெருவிழா மாசி மகம். இறைவர் கண்வர் முதலியோருக்கு மணக்கோலம் காட்டினார். பசுவாக சாபம் பெற்ற இறைவிக்கு சாபவிமோசனம் அளித்து பதியாயினமையின் பசுபதியீசுவரர் என்றும், தன் வரவைக் கவனியாது தேவி விளையாடி பந்தை எற்ற, அது வந்து அணைந்த இடம் ஆதலின் தலத்துக்கு பந்தணை நல்லூர் என்றும் பெயர்கள் உண்டாயின. பந்து தங்கிய சுவரும், பசுவின் குளம்பின் சுவரும் சுயம்பு மூர்த்தியின் சிரசில் இன்றும் காணலாம். சிவபெருமானும் உமாதேவியாரும் பந்து விளையாடி, மணம் செய்துகொண்ட திருவூர் என்றும், இது அவர்கள் செய்துகொண்ட ஐவகை மணங்களுள் ஒன்று என்றும் சொல்வார் உளர். இறைவர் கொண்டுள்ள கோலம் மணவாளக்கோலம். இவ்வூருக்கு வடக்கே அணைக்கட்டும், அதற்கு வடக்கே கங்கைகொண்ட சோழேச்சரமும் இருக்கின்றன.

பயண வசதிகள் உண்டு. மயிலாடுதுறை தஞ்சாவூர் மார்க்கம், குற்றாலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 10 கி.மீ இதே மார்க்கம் பட்டவர்த்தி-மணல்மேடு-திருப்பனந்தாள் சாலை வழி பேருந்துகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 35