திருமாந்துறை

இறைவர் : மாந்துறைக்கொழுந்து, ஆம்ராவனநாதர்
இறைவி : அழகால் உயர்ந்த அம்மை, வாலாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1

அழகான சிறிய கோயில். 3 நிலை இராச கோபுரம். மூலமூர்த்தி சுயம்பு. மகாமண்டபத்தின் திருவாயிலின் மேலே அழகிய வர்ணச் சித்திரம் ஒன்று உண்டு. அதில் வலப்புறமாக பிருங்கி முனிவர் உட்கார்ந்தபடி சுவாமிக்கு பூசை செய்வதாகவும், ஒரு மான் இடப்புறமாகப் படுத்திருந்து வணங்குவதாகவும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இங்கே ஒருமுறை வேடர்கள் மான் வேட்டை ஆடியபோது, தாய்மான் ஒன்றைக் கொன்று விட்டார்கள். அதன் குட்டிகள், தாய் இல்லாமல் தவித்தபோது, சுவாமியே தாய்மானாக வந்து குட்டிகளைப் பாதுகாத்து, வளர்த்து வந்தார். கோயில் முன் மண்டபத்தில், தாய்மான், குட்டிகள், இலிங்கம் முதலிய திருமேனிகள் சுதை சிற்பங்களாக உள்ளன. இவ் வரலாற்றினால் இத்தலத்துக்கு ‘திருமான்துறை’ என்ற பெயர் வழங்குவதாயிற்று. அம்பாள் கோயில், சுவாமி கோயில் மகாமண்டபத்தை சேர்ந்தால் போல் இருக்கிறது. ஆலயம் மா, பலா, தென்னை, வாழை, நெல், கரும்பு முதலியன நிறைந்த தோப்புக்களும், வயல்களும் பரவி, பசுமையும், அமைதியும் உள்ள மருத நிலத்தில் உள்ளது. பங்குனி மாதம் 1, 2, 3-ம் நாள்களில், காலை உதய சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது வீழ்கின்றன. அம்மூன்று தினங்களிலும் அந்நேரத்தில் சூரிய பூசை மிகப் பக்தி பூர்வமாக நிகழ்கிறது. கோயிலின் உள்ளே உள்ள நவக்கிரக சந்நிதியில், நடுவில் இருக்கும் சூரியமூர்த்தி, சாயாதேவி, சமஞ்ஞாதேவி என்ற இரு தேவியர்களுடன் எழுந்தருளி உள்ளார்.

பயண வசதிகள் உண்டு. திருச்சி-லால்குடி நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 58