திருப்பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர், கடலூர் புதுநகரம்)

இறைவர் : பாடலீச்சுவரர், தோன்றாத்துணை நாதர், கரையேறவிட்ட நாதர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

பெரிய கோயில். பெரிய கோபுரம். கெடிலநதி அருகில் ஓடுகிறது. புலிக்கால் முனிவர் பூசிதமையால் இப்பெயர் பெற்றது. ஆலயத்துள் பாதிரி மரம் இருக்கிறது. எனவே தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆயிற்று. பெரிய மூலவருக்கு ஏற்ப பெரிய நாகாபரணம். பொன்னினாகியது. நாவுக்கரசரை சமணர் கல்லினோடு கட்டி கடலில் விட்டபோது, அவர் “சொற்றுணை வேதியன்” என்ற நமச்சிவாயப் பதிகம் பாட, அக்கல்லே தெப்பமாக அவரைக் கரையில் சேர்த்த தலம். அந்த இடம் இப்பொழுதும் “கரையேற விட்டகுப்பம்” என்றாயிற்று. பின்பு அவர் “ஈன்றாளுமாய்” என்றெடுத்துப் பாடியது இத்திருக்கோயிலிலேயே. திருக்கோவலூர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானியார் சுவாமிகள் மடம் சந்நிதித் தெருவில் கோயிலுக்கு அண்மையில் இருக்கிறது.

விழுப்புரம்-மயிலாடுதுறைக்கு இடையில் உள்ள இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்திலிருந்து ½ கி.மீ. இதனை கடலூர் புதுநகரம் (N.T.) என்று வழங்குவர். பழம் நகர் (O.T.) வேறு.

நடுநாடு : 18