திருநெல்வேலி

இறைவர் : நெல்லையப்பர், வேய்முத்தர், வேணுவனநாதர்
இறைவி : காந்திமதி, வடிவுடைமங்கை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : மூங்கில்

பெரிய கோயில். பெரிய கோபுரங்கள். திருக்குளம் கோயிலினுள்ளே இருக்கிறது. சுவாமி சந்நிதிகள் இரண்டு; நெல்லையப்பர், வேணுவனநாதர். நடேசர் எழுந்தருளும் ஐந்து சபைகளுள் இது தாமிர (செப்பு) சபை. நடராஜர் திருவுருவம் மிக அழகு. காந்திமதியம்பாள் சந்நிதி பெரிதாய் சாந்நித்தியம் நிறைந்து தனியாக இருக்கிறது. மூங்கில் புதரில் இறைவர் தோன்றியதால் வேணுவனநாதர், வேய்முத்தர் என்று பெயர். கருவறையின் முன்னுள்ள மண்டபம் மிக்க சிற்பவேலைப்பாடுகள் உடையது. இந்த நாற்கால் மண்டபத்திலுள்ள 48 தூண்களைத் தட்டினால் ஏழிசை (சப்தஸ்வரங்கள்) பிறக்கும். இது மிக அற்புதமானது. சிவபெருமானுக்கு படைக்கவென வேதசர்மா என்பவர் வைத்திருந்த நெல்லை உலர்ச்சியபோது, மழை பெய்ய, அம்மழை நெல்லை அடித்துக்கொண்டு போய்விடுமோ என்று அவர் அச்சங்கொள்ள, சிவபெருமான் அந்த அச்சத்தைத் தீர்க்க வேலி கட்டி காத்தருளிய படியால் இத்தலம் நெல்வேலி எனப்பட்டது. சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சோமவார மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் முதலியன திராவிடக் கட்டடக் கலைச்சிறப்பினை விளக்குகின்றன. நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள் மிக்க சிறப்புடையன.

இது தாமிரபாணி ஆற்றின் வடகரையில் உண்டு. இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்திலிருந்து 1 கி.மீ. தூரம் இருக்கும். பேருந்து வசதிகள் மிக உண்டு.

பாண்டிநாடு : 14