திருக்காளத்தி

இறைவர் : காளகத்திநாதர், காளத்தீசுவரர், குடுமித்தேவர்
இறைவி : ஞானப்பூங்கோதை

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 4
தீர்த்தம் : பொன்முகலி

மிகப்பெரிய கோயில். காளத்தி மலையின் அடிவாரத்தில், பொன்முகலி ஆற்றின் கீழ்க்கரையில் உள்ளது. தென்கயிலாயம் எனப்பெறுவது. விராட்டுருடனது ஆறாதாரங்களில் இது விசுத்தித்தானம். பஞ்சபூதத் தலங்களில் இது வாயுத்தலம். அதனை விளக்கும் வகையில் மூலவர்க்கு முன் எரியும் விளக்குகளின் ஒன்றின் சுடர் காற்றினால் உந்தப்பட்டு எந்நேரமும் அசைந்து கொண்டே இருக்கும். அங்கு, மூலவரின் அருகே, கண்ணப்ப நாயனாரின் திருவுருவம் ஆணைப்படி வில் ஏந்தியபடி நிற்கிறார். திருச்சுற்றிலும் நாயனார் திருவுருவம் பெரியவளவில் உண்டு. இம்மலைக்கு சீகாளத்தி என்று பெயர் (சீ – சிலந்தி, காளம் – பாம்பு, அத்தி – யானை); சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் பூசித்த தலம். மூலவர் இம்மூன்றும் அமைந்துள்ளன. மூலலிங்கம் வேறெங்கும் இல்லாத வகையில் உயரமாக உள்ளது. வரிவரியான் கவசம் சார்த்தப் பட்டுள்ளது. இவர் மேற்கு பார்த்தபடி எழுந்தருளி உள்ளார். வாய் கலசமாகக் கொணர்ந்த பொன்முகலிப் புனித நீரால் திருமஞ்சனமாட்டி, தலையில் சூடிக் கொணர்ந்த பூக்களால் அலங்காரம், அர்ச்சனை செய்து, தன் வாயில் இட்டு, சுவை பார்த்த நல்லனவாகக் கண்ட இறைச்சியை அமுது படைத்த கண்ணப்பரின் பூசையை ஏற்ற மலைஉச்சிக் குடுமித்தேவர் ஆறு நாளில் அருள் புரிந்து, அணைத்துக் கொண்டார். அவருடைய சிலை மலையில் சிறு கோயிலில் இருக்கிறது. சிவாகம முறைப்படி சிவபூசை செய்த சிவாகோசரியார் என்ற சிவவேதியரும் இத்தலத்திலே மோட்சம் அடைந்தார். நக்கீரதேவர் இங்கே “கயிலை பாதி, காளத்தி பாதி” பாடிப் பேறு பெற்றார். துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளும், தம்பியாரும் “சீகாளத்தி புராணம்” இயற்றியுள்ளார்கள். கோயில் பிராகாரத்தில் பாதாள விநாயகர் இருக்கிறார். 25 படிகள் இறங்கிப் போய் தரிசிக்க வேண்டும். மாசி மாதத்தில் பெருவிழா நடக்கிறது. சிவராத்திரி மிகமிகச் சிறப்பாக, பக்தி சிரத்தையோடு அநுட்டிக்கப் படுகிறது. அக்காலத்தில் மக்கள் வெள்ளைத் தும்பை மலர்களால் அர்ச்சித்து வழிபடுவர். வடக்கே துர்க்காதேவி குன்றில் இருக்கிறார். இக்குன்றுக்கும், தெற்கே கண்ணப்பர் பூசித்த கண்ணப்பேசுவரர் கோயில் குன்றுக்கும் இடை மிக அழகாக இருக்கிறது. இத்தலம் மும்முடிச்சோழபுரம் என்றும், கண்ணப்பபுரம் என்றும் கல்வெட்டில் காணப்படுகிறது. 50 ஆண்டுகளின் முன் நகரத்தார் பெரும் பொருள் செலவு செய்து, பெருமளவில் மிகச் சிறப்பான கருங்கல் திருப்பணி செய்துள்ளனர்.

இத்தலம் இப்போது ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளது. காளாத்தி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ. சென்னையில் இருந்து விரைவு பேருந்து நேராக காளாத்தி போகிறது. 124 கி.மீ. பல வண்டிகள் உண்டு. பயணம் இலகுவானது.

தொண்டைநாடு : 19