திருவாட்போக்கி (சிவாயமலை, ஐயர்மலை, இரத்தினகிரி)

இறைவர் : இரத்தினகிரிநாதர்
இறைவி : சுரும்பார்குழலம்மை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : காவிரி

கோயில் பெரிது. கருங்கல் மலைமேல் உள்ளது. 1017 படிகள் ஏறவேண்டும். மலை இடையிடையே செங்குத்தாக இருக்கிறது. இடையிடையே மண்டபங்கள் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. நுழைவாயில் தெற்கில் இருக்கிறது. சுவாமி சந்நிதி இருள்மூடி உள்ளது. இங்கு நண்பகல் பாடு சிறந்தது. இறைவர் மத்தியானச் சுந்தரர். மத்தியானச் சொக்கர் எனவும் அழைக்கப்படுவர். ஆரிய மன்னன், மாணிக்கம் வேண்டி யாத்திரை செய்தபொழுது, சிவபெருமான் ஆணைப்படி, நீர்த்தொட்டி ஒன்றை காவிரி நீரினால் நிரப்ப முயன்றும் முடியாதபோது, கோபங் கொண்ட அரசன், தன் உடைவாளை ஓங்க நினைத்தான். அப்போது சிவபெருமான் காட்சி கொடுத்து, இரத்தினத்தை தொட்டியில் காண்பிக்க, அவன் அது வேண்டாம் என்று சிவதொண்டு செய்து, இறை அருள் பெற்று, முத்தி அடைந்தான். ஆரியனால் வெட்டப்பட்ட வாள் குறியை இலிங்கத்தில் காணலாம். அதனால் இவருக்கு முடித்தழும்பர் என்று ஒரு பெயரும் உண்டு. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடிபூசை நிகழ்கிறது. இறைவன் பூசைக்கு ஓர் இடையன் கொணர்ந்த பசும்பாலை, ஒரு காகம் கவிழ்த்தது. அதனால் அக்காகம் எரிந்து சாம்பல் ஆயிற்று. அன்று முதல் காகங்கள் மலையை நோக்கிப் பறப்பதில்லை. மலை, ‘காகம் அணுகா மலை’ ஆயிற்று.

திருச்சி-ஈரோடு மார்க்கத்தில், குளித்தலை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 11 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 1