திருவெண்காடு

இறைவர் : வெங்காட்டீசர், சுவேதாரணியர்
இறைவி : நெடுங்கலைச்செல்வி, பிரம்மவித்யாநாயகி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 2 + சுந்தரர் 1 = ஆக 6
தலமரம் : ஆல், கொன்றை, வில்வம்
தீர்த்தம் : முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்)

கோயில் மிகப்பெரியது. 5 சுற்றுக்களைக் கொண்டது. அதனுள்ளேயே சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள் உள்ளன. சம்பந்தர் தேவரத்தில், பிள்ளை வேண்டிய பெண்ணாகடத்து அச்சுதகளப்பாளரும், மனைவியும் இங்கு வந்து ஒரு மண்டலம் முக்குளமும் நீராடி, விரதம் இருந்து, மெய்கண்ட தேவரை மகனாகப் பெற்றார்கள். இங்கு நடேசர் சந்நிதி தனிச்சிறப்புடையது. ஆதி சிதம்பரம் என்பர். இதனினும் தனிச்சிறப்புடையவர் மிகமிக அழகிய அகோர மூர்த்தி. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தி. சிலாவிக்கிரகமும், விழா விக்கிரகமும் உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டுக்கும் சிறப்பு வழிபாடுகள். ஆல், கொன்றை, வில்வம் ஆகிய மூன்றும் தலமரங்களாக விரிவான வடக்குப் பிராகாரத்தில் அக்கினி தீர்த்தத்தின் கிழக்கே உள்ளன. இங்ஙனம் ஒரு திருக்கோயிலிலே மூன்று மூர்த்திகள், மூன்று தீர்த்தங்கள், மூன்று தலமரங்கள் கொண்டு விளங்குவது தனிப்பெரும் சிறப்பாகும். பிள்ளைப்பேறு வேண்டுவோர் இன்றும் முக்குள நீராடி, மும்மூர்த்திகளையும் வேண்டுதல் செய்வர். இத்தலத்தில் இறைவன் யமனை உதைத்து மறைச் சிறுவனைக் காப்பாற்றினார்.

பயண வசதிகள், தங்கும் இடங்கள் உண்டு. சீகாழி-பூம்புகார் மார்க்கம், சீகாழியில் இருந்து 12 கி.மீ. பேருந்து வசதி உண்டு. 1 கி.மீ.க்கு அப்பால் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரம் உண்டு. கால் நடையாகச் சென்றடையலாம்.

சோழநாடு, காவிரி வடகரை : 11