திருமறைக்காடு (வேதாரணியம்)

இறைவர் : மறைக்காட்டீசர்
இறைவி : யாழைப்பழித்த மொழியாள்

பதிகம் : சம்பந்தர் 4 + அப்பர் 5 + சுந்தரர் 1 = ஆக 10
தலமரம் : வன்னி

மிகப்பெரிய கோயில். திருக்குளமும் பெரிது. கிழக்கிலும், மேற்கிலும் 5 நிலைக் கோபுரங்கள். விடங்கத் தலங்கள் ஏழில் இதுவும் ஒன்று. இங்கே தியாகேசர் புவனிவிடங்கராக அம்சபரீத (அன்னநடை) நடனம் நிகழ்த்தி அருளுகிறார். அவர் எதிரில் (திருவாரூரில் போல) சுந்தரர் பரவை நாச்சியாருடன் எழுந்தருளி உள்ளார். தியாகேசர் கோயிலில் மிகப் பாதுகாப்பாக இரும்புப் பேடகத்தில் மரகதலிங்கம் எழுந்தருளப் பட்டுள்ளது. சாயரட்டை பூசையின் போது மாத்திரம் சிவாசாரியார் திருமேனியை வெளியே எடுத்து, அபிடேக ஆராதனை செய்து, உடனே மறுபடியும் உள்ளே வைத்துவிடுவர். தக்ஷிணாமூர்த்தி நான்கு திருமுகங்களுடன் காட்சி தருகிறார். ஸ்ரீகாட்சி கொடுத்த நாயகர் ஐம்பொன் திருமேனி மிக அற்புதமாக உள்ளது. சிவபெருமான் இரு திருக்கரங்களுடன் உமாதேவியுடன் இடப வாகனத்தைச் சார்ந்தபடி நிற்கும் திருக்கோலம். மேற்குப் பிராகாரத்தில், தென்-மேற்கில், கிழக்கு நோக்கி, மூவேந்தர்களின் பெயரால், சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என்று மூன்று தனிக் கோயில்களில் எழுந்தருளி உள்ளனர். இக்கோயில் 74 சக்தி பீடங்களில் ஒன்று – சுந்தரி பீடம். அறுபத்து-மூன்று நாயன்மார் ஐம்பொன் திருமேனிகள் உண்டு. நவக்கிரகங்கள் ஒரே வரிசையில், வார நாள்களின் ஒழுங்கிலே இருக்கின்றனர். சனீசுவரனின் தனிச் சந்நிதியின் அருகே ஒரு பலமுண்டு. மணிகர்ணிகை முதலிய மூன்று தீர்த்தங்கள் உள. கோயிலுக்கு சமீபமாக, எதிரே உள்ள சமுத்திரமே “வேததீர்த்தம்” எனப்படுவது. திருவாரூர் தேர் அழகு முதலியன போல, இங்கு வேதாரணியம் விளக்கு அழகு சிறந்தது என்பர். விளக்கு ஏற்றுமாறு நிலமும், பொருளும் வழங்கிய செய்திகளே இத்தலக் கல்வெட்டுக்களில் மிகுதியாக உள்ளன. இங்கே ஒருமுறை எரிந்து, அவிந்து கொண்டிருந்த திருவிளக்கினை அழிய விடாது (அபுத்திபூர்வமாக) தூண்டிய எலி, சிவபுண்ணியதினால் அடுத்த பிறப்பில் மாவலிச் சக்கரவர்த்தியாகப் பேறு பெற்றது. அகத்தியருக்குத் தந்த திருமணவாளக் கோலக் காட்சி மூலவருக்குப் பின்னால் சுவரில் செதுக்கப் பட்டுள்ளது. துர்க்காதேவியின் திருமுன் அழகுடையது. சண்டேசுவரர் சண்டிக்கேசுவரியுடன் எழுந்தருளி உள்ளார். மகாமண்டபத்தின் இடது கோடியில் அர்த்த மண்டபத்துக்கு முன்னால் காப்பு செய்யப் பட்டிருக்கும் கதவமே அரசுவுக்கும், பிள்ளையாருக்கும் ஆகத் திறந்தும், பின் மூடியதுமாகிய கதவு. மாசிமாதப் பெரும் திருவிழாவில் 7-ஆம் நாள் இக்கதவு திறப்படைப்பு வைபவம் நடைபெறுகிறது. இவ்விரு பெருமக்களும் இங்கு இருக்கும்போது தான், மதுரையில் இருந்து, சமணர்களை அழித்து, தென்னவனை வாழச் செய்யவும், சைவசமயத்தை ஓங்கச் செய்யவும், பிள்ளையாரை எழுந்தருளும்படி அழைத்து மங்கையர்க்கரசியாரும், குலச்சிறை நாயனாரும் அனுப்பிய பரிசனர் வந்து அவரை அழைத்துச் சென்றது. இக்கோயில் பல நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணத்தில் உள்ள வரணி ஆதீனகர்த்தர்களின் அருள் ஆட்சியில் இருந்து வருகிறது.

பயண வசதிகள் உண்டு. வேதாரணியம் ஒரு ரயில், பேருந்து நிலையம். வண் (?)

சோழநாடு, காவிரி தென்கரை : 125