திருவான்மியூர்

இறைவர் : பால்வண்ணநாதர், மருந்தீசர், வான்மியூரீசன்
இறைவி : திரிபுரசுந்தரி, சொக்கநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 = ஆக 3
தலமரம் : வன்னி

பெரிய கோயில். இராச கோபுரம் உண்டு. இறைவர் தீண்டத் திருமேனி. சென்னையில், திருமயிலாப்பூர் மத்தியில் இருக்க, வடக்கே 9 கி.மீ தொலைவில் திருவொற்றியூரும், தெற்கே 3 கி.மீ தூரத்தில் திருவான்மியூரும், ஆக மூன்று தலங்களும் ஒரே நேர்கோட்டில், கடற்கரையில் உள்ளன. திருவொற்றியூருக்கும், திருவான்மியூருக்கும் பல நிகழ்சிகளில் ஒற்றுமை உண்டு. திருவொற்றியூரிலும், திருவான்மியூரிலும் தியாகேசர் சிறப்பாக எழுந்தருளி உள்ளார். இரண்டு தலங்களின் பெருவிழாவின் போது தியாகேசர் 18 வகை நடனங்கள் ஆடுவார். திருவொற்றியூரில் பட்டினத்தடிகள் சமாதியாகி, அவருக்கு சமாதி கோயில் எழுப்பப் பட்டுள்ளது. திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் சமாதியாகி, அவருக்கு சமாதி கோயில் எழுப்பப் பட்டுள்ளது. திருவொற்றியூரில் 27 நக்ஷத்திரங்களைக் குறிக்க, அசுவினி தொடக்கம், ரேவதி வரை அவர்கள் பெயர்களோடு 27 இலிங்கங்கள் எழுந்தருளச் செய்துள்ளன. திருவான்மியூரில் இறைவருடைய 108 திருநாமங்களைக் குறிக்கும் வகையில், வடக்கு உள் பிராகாரத்தில், ஒரே சந்நிதியில் 108  சிவலிங்கத் திருமேனிகள் தாபிக்கப்பட்டுள்ளன. இரு தலங்களிலும் கோயில்களின் மடாவளாகத்தில் திருக்குளங்கள் உண்டு. இரண்டு கோயில்களிலும் அம்பாள் சந்நிதிகள், வெவ்வேறாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் வேறுபாடுகளும் உண்டு. திருவான்மியூரில் இரண்டாம் பிராகாரத்தில் கோயிலை சுற்றி வில்வமரங்கள் சோலையாக உண்டு. தேவர்கள் தாம் பெற்ற அமிர்தத்தின் ஒரு பகுதியை சிவலிங்கம் ஆக்கி வழிபட்டனர். அதனால் மருந்தீசர் எனப் பெயர் பெற்றார். காமதேனு தன் பாலை சுரந்து வழிபட்டதானால், பால்வண்ணநாதர் எனப்பட்டார். திருவொற்றியூரில் இரண்டாம் பிராகாரத்தில், சுந்தரர் சங்கிலியருக்கு “திருவொற்றியூரை விட்டுப் போகேன்” என்று, இறைவர் கனவில் தோன்றி கூறியபடி, சங்கிலியார் கேள்விப்படி, சபதம் செய்ய நிழல் கொடுத்த மகிழமரம் உண்டு. அருகே திருவடிக் கோயில் உண்டு.

பயண வசதிகள் மிக உண்டு. சென்னையில் இருந்து மரக்காணம் வழியே செல்லும் பேருந்துகள், கோயிலின் கிழக்கு வாயிலைக் கடந்து, நெடு சாலை வழியே ஓடுகின்றன.

தொண்டைநாடு : 25