திருவேட்களம்

இறைவர் : பொற்சடையப்பன், பாசுபதேசுவர்
இறைவி : நல்லநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : சிவகங்கை

அளவான சிறிய கோயில். 3 நிலை இராசகோபுரம். முழுவதும் சமீபகாலத்து கருங்கல் திருப்பணி. கோயிலுக்கு எதிரில் பெரிய திருக்குளம் உண்டு. அருச்சுனருக்கு இறைவன் பாசுபதம் கொடுத்த தலம். இங்கு அருச்சுனர் திருவுருவமும், பாசுபதம் ஏந்திய பாசுபதேசுவரரும், சுவாமி-அம்பாள் திருவிழா திருமேனிகளும் உண்டு. இத்தலத்தில் இன்றும் ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பௌர்ணமி திருநாளில் இறைவனார் வேடனாக வந்து அருச்சுனனுடன் பொருது பாசுபதம் நல்கும் விழா நடைபெறுகிறது. புகழ் பூத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கிழக்கு எல்லையில், வயல்கள் சிறுகுடியிருப்புகளின் மத்தியில் இருக்கிறது. கோயிலுக்கு வடமேற்கில் கொற்றவன்குடியில் உமாபதி சிவசாரியாரின் கோயிலும், தென்மேற்கில் திருநெல்வாயில், திருக்கழிப்பாலை என்ற பாடல் பெற்ற தலங்களும் உண்டு. இலக்குமி பூசித்தபடியால் இப்பெயர் பெற்றது. சம்பந்தர் தமது இரண்டாவது தலயாத்திரையின்போது திருத்தில்லை தரிசனத்துக்காக வந்தபோது தில்லையில் நடேசர் ஆடிக்கொண்டிருப்பதால் தாம் அங்கு தூங்காது இரவில் இங்கு திருவேட்களத்தில் துயில்கொண்டு, பகலில் திருத்தில்லை சென்று வணங்கி வந்தார்.

சிதம்பரத்திலே இருந்து பேருந்து பயண வசதிகள் உண்டு. கால்நடையாகவும் செல்லலாம். இத்தலத்துக்கு தென்மேற்கே கொள்ளிட நதியும் பாய்கிறது.

சோழநாடு, காவிரி வடகரை : 2