திருப்புள்ளிருக்குவேளூர் (வைதீஸ்வரன் கோயில்)

இறைவர் : வைத்தியநாதர்
இறைவி : தையல்நாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 = ஆக 3
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்
தலமரம் : வேம்பு

பெரிய கோயில். 2 பெரிய கோபுரங்கள். புள் (சடாயு, சம்பாதி என்னும் பறவைகளும்), இருக்கு (வேதம்), வேள் (முருகன், சூரியன்) பூசித்த படியால் இப்பெயர் வந்தது. இது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கப்பெறுகிறது. மேற்கு நோக்கிய சந்நிதியில் சித்தாமிர்தம் என்னும் பெரிய தீர்த்தக் குளம், நீராழி மண்டபத்தோடு உண்டு. தேவலோகத்தில் சித்தர்கள் கூடி, சிவனுக்கு செய்த அபிஷேக தீர்த்தம், ஒன்று கூடி இங்கு வந்து சேர்ந்தமையால், இப்பெயர் ஆயிற்று. தீராத நோய்களை தீர்த்து அருளும் இயல்பு இதற்கு உண்டு. இறைவருக்கு வைத்தியநாதர் என்று பெயர். இங்கே செல்வமுத்துக்குமாரர் சந்நிதி மிகச்சிறப்பு. மாதம் தோறும் வரும் கார்த்திகை நக்ஷத்திரத்தில், முற்பகல் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பெரிய திருமுழுக்கு, சிறப்பு விழா முதலியன வசந்த மண்டபத்தில் நிகழும். இரவு வெள்ளி ரத்தத்தில் திருவீதிவலம் வருவர். திருமுழுக்கு ஆட்டிய பன்னீர், பால், சந்தனம் முதலியன சேர்ந்த கலவைத் தீர்த்தத்தை, அடியார் வாங்கி உட்கொள்வர். பலவித நோய்கள் தீர்ந்துவிடும். செவ்வாய் கிரகம் இறைவனைப் பூசித்து, பேறு பெற்றதனால், இத்தலம் அங்காரக தோஷ நீக்கத்துக்கு புகழ் பெற்றது. அங்காரகன் சிலா, தாமிர விக்கிரகங்கள் தனித்தனியே உண்டு.

பயண வசதிகள் பல உண்டு. சிதம்பரம்-மயிலாடுதுறை பாதையில், சீகாழியில் இருந்து 6 கி.மீ தூரத்தில் உண்டு. சிதம்பரம்-மயிலாடுதுறை வழிப் பேருந்துகள் வைதீஸ்வரன் கோயில் கிழக்கு திருவாயிலில் நின்றே, அப்பாற் செல்லும். இருப்புப்பாதை நிலையம் ½ கி.மீ தூரத்தில் இருக்கிறது. இங்கிருந்து திருப்புன்கூர் 4 கி.மீ. திருக்கண்ணார் கோயில் கி.மீ. இங்கிருந்து பட்டவர்த்தி வழியே கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருப்புன்கூர், திருப்பனந்தாள், ஸ்ரீகாசிமடம், சேய்ஞ்ஞலூர், திருவிடைமருதூர், திருபுவனம் முதலிய தலங்கள் ஊடகச் செல்லும்.

சோழநாடு, காவிரி வடகரை : 16