திருமழபாடி

இறைவர் : மழபாடி மாணிக்கம், வச்சிரதம்பநாதர்
இறைவி : அழகம்மை, சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 2 + சுந்தரர் 1 = ஆக 6
தீர்த்தம் : கொள்ளிடம்
தலமரம் : பனை

பெரிய கோயில். 7 நிலை இராச கோபுரம். கொள்ளிடக் கரையில் பெரிய சுற்று மதில்கள். உள்ளே 5 நிலைக் கோபுரம். இரண்டு கோபுரங்களுக்கும் இடையில் நந்தி மண்டபம். இது திருமழபாடி வைத்தியநாத கோயில் எனவும் வழங்கப்படுகிறது. வடக்கில் அம்மை கோயில் தனியே உளது. கோயில் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பட்ட சிறு கோயில்களுள் ஒன்று. நந்தி தேவருக்கும், சுயரை இருவருக்கும், பங்குனிப் புனர்பூசத்தில் திருக்கல்யாணம் நிகழ்ந்த தலம். ஐயாறப்பர் அன்று இங்கு எழுந்தருளி நடத்தி வைத்திருக்கிறார். இதனாலே, நந்திதேவரும், சுயசை தேவியாரும் சித்திரைப் பௌர்ணமியில் திருவையாறுக்கு எழுந்தருளி, ஐயாறப்பர்-தேவியோடு ஏழூர் செல்லும் விழா நடைபெறுகிறது.

காலையில் ஐயாறப்பரும், தேவியாரும், நந்திதேவரும், தேவியாரும், வெவ்வேறு பல்லக்கில் புறப்பட்டு, திருப்பழனம் எழுந்தருளி, பின் முறையே, திருச்சொற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர் முதலிய தலங்களில் எழுந்தருளி, சிறப்புப் பூசனைகளில் அமுது முதலியன ஏற்றருளி, திருப்பூந்துருத்தி எழுந்தருளுவர். ஐவரும், அவர்கள் தேவியாரும் அன்று இரவு அங்கு தங்கி, பூசனைகளை ஏற்று, பள்ளி கொள்வர். அடியார்களில் சிலர் திருப்பூந்துருத்தியிலும், ஏனையோர் காவிரிப் படுக்கையில் முழுநிலவில் ஓய்வு எடுப்பார்.

அடுத்த நாள் காவிரியில் தீர்த்தம் ஆடிய பின், புது அலங்காரங்களுடன், ஆறு புஷ்பப் பல்லக்குகளில், ஏழாவது தலமாகிய திருநெய்த்தானம் செல்வர். அங்கு பூசனை, அமுது படைத்தல் முதலியன முடிந்தவுடன், கடைசித் தலமாகிய திருவையாற்றை நோக்கி, எட்டுப் பல்லக்குகளும் செல்லும் காட்சி ஒரு அருமையான காட்சியாகும். காலை ஒன்பது மணியளவில், எட்டுப் பல்லக்குகளில், ஒரே வரிசையில் நின்று, பக்தகோடிகளுக்கு தரும் காட்சி, ஒரு அரிய அற்புதக் காட்சி ஆகும். தவறாது பார்த்து, தரிசிக்க வேண்டியது ஒன்றாகும்.

இறைவர் சுந்தரரை, “இப்பதியை தரிசிக்க மறந்தனையோ?” என்று கேட்க, அவர் உடனே இங்கு எழுந்தருளி, “பொன்னார் மேனியனே” என்று பதிகம் பாடி, மகிழ்ந்த தலம். புருஷா மிருகம் தாபித்த இலிங்கத்தை, அவனால் எடுக்க முடியாததால், “வச்சிரதம்பமூர்த்தி” எனப் பெயர் பெற்றார்.

பயண வசதிகள் பல உண்டு. புள்ளம்பாடி, தஞ்சாவூர் இருப்புப்பாதை நிலையங்களில் இருந்தும், திருவையாற்றில் இருந்தும் பேருந்துகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 54