திருஅரசிற்கரைப்புத்தூர்

இறைவர் : படிக்காசு அளித்த பரம்
இறைவி : அழகம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

அழகாபுத்தூர் என்று இப்போ வழங்கப்படுகிறது. செருவிலிப்புத்தூர் என்று பெரியபுராணம் வழங்குகிறது.

சிறிய கோயில். கோச்செங்கட்சோழ நாயனார் திருப்பணி. மேற்கு பார்த்த சந்நிதி. மாடக்கோயில். புகழ்த்துணையார் என்னும் சிவமறையவர் வாழ்ந்து, சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்து வரும் நாளில் பஞ்சம் வந்துற்றது. அந்நாள்களில் ஒருநாள் உணவு இன்மையால், பசியுற்றும் தொண்டை விடாது ஆற்றும்போது மயங்கி வீழ்ந்தார். சோர்ந்து வீழ்ந்த நிலையில், அவர் சிறிது அயர்ந்து விட்டார். அப்போது இறைவர் அவர் கனவில் தோன்றி, “இப்பஞ்ச காலம் முடியும்வரை உனக்கு நாம் ஒவ்வொரு நாளும் ஒரு காசு படியாக வைப்போம்” என்று அருளி ஆட்கொண்ட சிறந்த தலம். கோயில் அரிசொல்லாற்றின் கரையில் இருக்கிறது.

பயண வசதிகள் உண்டு. நறையூர் சித்தீச்சரத்தில் இருந்து 2 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 66