திருக்கோளிலி (திருக்குவளை)

இறைவர் : கோளிலியெம்பெருமான்
இறைவி : வண்டார் குழலம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 2 + சுந்தரர் 1 = ஆக 4
தீர்த்தம் : பிரம தீர்த்தம்
தலமரம் : பலா

பெரிய கோயில். ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. அவனிவிடங்கத் தியாகர் எழுந்தருளிய தலம். அவரது நடனம் வண்டு நடனம். அவர் சந்நிதி சாந்நித்தியமாக விளங்குகிறது. கோயிலுக்கு முன் பெரிய நிறைந்த நன்னீர்க்குளம். கோயிலினுள்ளே நவக்கிரகங்கள் ஒரே நேர் வரிசையில் உளர். சுந்தரருக்கு, அவர்பாற் கொண்ட அன்பினாலே வேண்டிய நெல்லு, பருப்பு வழங்கிய குண்டையூர் கிழாரின் ஊர் அண்மையில் உண்டு. அவருக்கு கோயிலுக்குள் தனிச்சந்நிதி உண்டு. ஒருமுறை சுந்தரருக்குக் கொடுப்பதற்கு நெல் இல்லாது கவலையுற, இறைவன் நெல் மலையையே கொடுத்தார். அதனை திருவாரூர் கொண்டுசெல்ல ஆளில்லையே எனக் கவலை கொள்ள, “நீள நினைந்தடியேன்” என்று சுந்தரர் பதிகம் பாட, இறைவர் பூதகணங்களை செல்விட்டு, நெல் மலையை திருவாரூரில் பரவை வீட்டில் சேர்ப்பித்தார். திருக்கோளிலிக்கும் குண்டையூருக்கும் இடையே சந்திர ஆறு ஓடுகிறது. வீமன் பகாசுரனைக் கொன்ற பாவத்தை இங்கே வழிபட்டுத் தீர்த்துக் கொண்டான். புகழ்பூத்த எட்டுக்குடி என்ற சிறந்த முருகன் கோயில் இங்கிருந்து 3 கி.மீ. தூரம்.

பயண வசதிகள் பல உண்டு. திருநெல்லிக்கா இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கிழக்கே 6 கி.மீ. கீழ்வேளூர், திருவாரூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து முறையே 11, 18 கி.மீ. தூரத்தில் உள. பேருந்துகள் எட்டுக்குடி வழியாக கோளிலி செல்கின்றன.

சோழநாடு, காவிரி தென்கரை : 123