திருப்பறியலூர் (பரிசலூர்)

இறைவர் : வீரட்டேசுவரர், தக்ஷபுரீசுவரர்
இறைவி : இளங்கொடியம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சந்திரபுஷ்கரணி
தலமரம் : பலா

சிறிய கோயில். மேற்கு பார்த்த சந்நிதி. அட்ட வீரட்டத்தலங்களுள் ஒன்று. முதாவதாகக் கருதப்படுவது. சிறிய அளவில் சோமாஸ்கந்த மூர்த்தி, நடேசர் திருமேனிகள் அழகாக அமைந்துள்ளன. காலசம்கார மூர்த்தி 8 திருக்கரங்களோடு மிகமிக அழகாக, சிறப்புப் பெற்று இருக்கிறார். மகாமண்டபத்துக்கு வெளியே, நர்த்தன விநாயகருக்கு அருகே, சுவரில் “தக்கன் பூசை செய்தல்” சிற்பம் உண்டு. முருகனின் ஐம்பொன் திருமேனி, நேரமுன் பார்த்துக் கொண்டிருக்கும் மயிலின் மீது நிற்கின்ற பாவனையில் உண்டு. தக்கன் வேள்வி செய்த தலம். அதில் தண்ணீர் இல்லாதபோது, நிலத்தை தோண்டிப் பார்த்தால் கரிய மண் இருப்பதைக் காணலாம். இது தக்கன் யாகம் செய்ததை உறுதிப் படுத்துவதாக உள்ளது. இதற்கு கரிக்குளம் என்றும் பெயர் உண்டு. தக்கன் சிவபெருமானை மருமகனாகப் பெற்றும், அறிவு மயங்கி, வதிவழி சிவபெருமானுக்கு மாறாக யாகம் செய்தான். வீரபத்திரர் தோன்றி, தக்கனின் தலையை அரிந்தும், யாகத்தையும், அதில் பங்குகொண்ட இந்திராதி தேவரையும் அழித்தார். இங்கு வழிபடுவோரின் பாவங்களை இறைவன் பறித்தெடுப்பதனால் இவ்வூர் இப்பெயரைப் பெற்றதுமாம். இறைவர் மேற்கு நோக்கியவாறும், வீரபத்திரர் தெற்கு நோக்கியவாறும், எழுந்தருளி உள்ளனர். அவர்களுக்குள் தக்கன் உருவம் உள்ளது.

பயண வசதி சற்று குறைவு. மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் மார்க்கம் 13½ கி.மீ தூரத்தில் உள்ள செம்பொன்னார் கோயிலுக்கு பேருந்தில் சென்று, அப்பால் கிராமத்தின் உள்ளே கி.மீ தூரம் நடையாகச் சென்று அடைதல் வேண்டும்.

சோழநாடு, காவிரி தென்கரை : 41