திருச்சோற்றுத்துறை

இறைவர் : தொலையாச்செல்வநாதர்
இறைவி : ஒப்பிலாவம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 4 + சுந்தரர் 1 = ஆக 6
தீர்த்தம் : காவிரி ஆறு, பகலோன் தீர்த்தம்

அளவான கோயில். திருவையாற்றை முதலாகக் கொண்ட எழூர்களில் மூன்றாவது. பகலவன், கௌதமர் பூசித்த தலம். கௌதமர் திருவுருவம் கோயிலினும் இருக்கிறது. சிவனடியான் அருளாளன் என்பவன் பசியால் வருந்தும் பொழுது, இறைவர் அவனுக்கு என்றும் குறையாத அக்ஷய பாத்திரம் வழங்கிய திருவூர். இம்மரபை ஒட்டியும், பெயருக்கேற்பவும் ஏழூர்த் திருவிழாவின் போது, திருவையாறு, திருப்பழனத்தில் இருந்து இறைவனுடன் செல்லும் அடியார்க்கு மாகேசுரபூசை, அன்னதானம் முதலியன பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் நிகழும். இவ்வூருக்கு அருகில் “சோறுடையான்” வாய்க்கால் ஓடுகிறது.

எழூர்களில் இரண்டாவது ஆகிய திருப்பழனத்தில் இருந்து, காவிரி, குடமுருட்டு ஆறுகளைக் கடந்து வரவேண்டும். 3 கி.மீ தூரம். தஞ்சாவூர் இருப்புப்பாதை சந்திப்பு நிலையத்தில் இருந்து, கண்டியூர் வழியாகப் பேருந்தில் வருவதானால் (10 + 3) 13 கி.மீ தூரம். பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 13