திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)

இறைவர் : சிவலோகத்தியாகர், நல்லூர்நம்பன்
இறைவி : திருவெண்ணீற்றுமையம்மை

பதிகம் : சம்பந்தர் 1

பெரிய கோயில். முன் பெரிய திருக்குளம். கோயில் தூய்மையாக இருக்கிறது. அம்பாளுடன் வில்-அம்பு ஏந்திய திரிபுரசங்கார மூர்த்தி சிறப்பாக இருக்கிறார். தாளக்கட்டு ஏந்திய வடிவத்தில் பாலசம்பந்தர் எழுந்தருளியுள்ளார். திருநீலநக்கர், முருகர், சிவபாதவிருதையர், நம்பாண்டார், நீலகண்டப்பெரும்பாணர் முதலியோர் தத்தம் பன்னியர்களுடன் ஐம்பொன் திருமேனிகளாக எழுந்தருளியுள்ளனர். வைகாசி மூலத்தன்று சம்பந்தர், வேதவிதிப்படி திருநீலநக்க நாயனார் திருமணம் செய்துவைத்த பின், கோயிலினுட் சென்று சுவாமியை “நல்லூர் பெருமணம் வேண்டா” என்ற பதிகம் பாடினார். பின் கோயிலினுள்ளே ஒரு சோதி தோன்றிற்று. அதனுள்ளே திருக்கல்யாணத்துக்கு வந்திருந்த அனைவரையும் அவர் பன்னியரையும் புகச் செய்து, தாமும் “காதலாக” என்றெடுத்து பஞ்சாக்கரத்தை பாடி சோதியினுள் கலந்தனர். இவ்விழா வெகு சிறப்பாக வைகாசி மூலத்தன்று நிகழுகிறது. தரிசித்து மகிழலாம்.

சிதம்பரம்-மயிலாடுதுறை மார்க்கம் கொள்ளிடம் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து (மகேந்திரன் பள்ளி செல்லும் வழியில்) கி.மீ. பயணத்துக்கு ரயில், பேருந்து வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 5