திருப்பூவணம்

இறைவர் : பூவணநாதர், புஷ்பவனநாதர்
இறைவி : மின்னம்மையார், சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 4

அளவான கோயில். சுவாமி, அம்பாள் கோயில்கள் தனித்தனியே உண்டு. சிறந்த சிற்பங்கள். நடேசர் பெரிய சிலாவிக்கிரமாக உள்ளார். இங்கி அவர் ஆடியது பிரம தாண்டவம். ஆளுடைய நம்பிகள் மூவேந்தர்களோடு உடனின்று வழிபட்ட தலம். காசிக்குச் சமானமான தலம். இங்கு வாழ்ந்துவந்த பொன்னனையாள் என்னும் உருத்திர கணிகை, அங்கே உள்ள கோயிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் ஒன்று எழுந்தருள விரும்பினாள். தன்னிடம் இருந்த பொன் போதாமையை உணர்ந்து மிகவும் கவன்றாள். அவளுடைய கவலையைப் போக்க இறைவர் ஒருநாள் அவளிடம் சென்று, அவளிடமிருந்த ஏனைய உலோகங்களை வெளியே கொண்டுவரச் செய்து, அவற்றை இரசவாதம் செய்து கொடுத்தார். அவற்றைக்கொண்டு பொன்னனையாள்  ஒரு சோமாஸ்கந்த வடிவம் அமைப்பித்தாள். அவருடைய அழகில் தன் மனதைப் பறிகொடுத்த பொன்னனையாள் ஆசை மிகக்கூர அவரது கன்னத்தில் தன் விரலால் கிள்ளினாள். அவ் அடையாளத்தோடு சோமாஸ்கந்தர் இன்னும் அழகாக அங்கே விளக்கமுற எழுந்தருளியுள்ளார்.

பாண்டிநாடு : 11