திருவலஞ்சுழி

இறைவர் : கற்பகநாதேசுவரர், கபர்த்தீசர், சடையப்பர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 2 = ஆக 5
தீர்த்தம் : காவிரி

பெரிய கோயில். அழகாக இருக்கிறது. பக்கத்தில் அரிசிலாறு ஓடுகிறது. பாற்கடலில் அமுதம் திரள அநுக்கிரகித்த வெள்ளைவாரப் பிள்ளையாரை இந்திரன் இங்கே எழுந்தருளச் செய்து வழிபட்டான். இன்று திருவிழாக்கள் இப் பிள்ளையாருக்கே நடைபெறுகின்றன. இவர் எழுந்தருளியுள்ள கோயில் மண்டபம் அழகிய சித்திர கலை வேலைப்பாடுகள் கொண்டுள்ளது. பிள்ளையாரை எவரும் தொடுவதில்லை. தொடக்கூடாது என்பது மரபு. இங்கே ஆதிசேடன் பாதாளத்தில் இருந்து பிலத்தின் வழியால் வெளிப்பட்டு, சிவராத்திரியில் திருவலஞ்சுழி, திருநாகேச்சரம், திருப்பாம்புரம், திருநாகைக் காரோணம் ஆகிய 4 தலங்களில் 4 காலத்திலும் பூசித்தான். பிலத்தின் மேல் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. காவிரி ஆறு பிலத்தில் மறைய, சோழ அரசன் வருந்தினான். அவன் கலக்கத்தை நீக்க ஏரண்ட முனிவர் பிலத்தில் இறங்கி, தம்மைப் பலி கொடுக்க, காவிரி ஆறு மேவி வந்து, கோயிலை வலம் சுற்றி ஓடியது. அதனால் அதற்கு வலஞ்சுழி என்ற பெயர் ஏற்பட்டது. ஏரண்ட முனிவருக்கு தனிச் சந்நிதி உண்டு. பக்கத்தி வலஞ்சுழிநாதர் என்னும் சிவலிங்கப் பெருமான் உளர். கோயில் பிலத்துவாரத்தில் திரிணாவர்த்தேசுவரரும், அருகில் ஏரண்ட முனிவரும் வீற்றிருக்கின்றனர். இத்தலம் திரிணாவர்த்தம் என்றும், தஷிணாவர்த்தம் என்றும் வழங்கப்பெறும்.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கத்தில், கும்பகோணத்தில் இருந்து மேற்கே  6 கி.மீ. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய சுவாமிமலை,  இருப்புப்பாதை நிலையத்துக்கு அருகில் உளது. 1 கி.மீ. நடந்தும் போகலாம். ரயில், பேருந்துகள் பல உள. பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 25