திருத்தூங்கானைமாடம்

இறைவர் : சுடர்க்கொழுந்துநாதர், பிரளயாககேசுர்
இறைவி : கடந்தைநாயகி, ஆமோதனாம்பாள்

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

பெரிய கோயில். கட்டுமலைமேல் இருக்கிறது. மேலே ஏறவும், கீழே இறங்கவும் தனித்தனி படிக்கட்டுகள் உள. அம்மன் சந்நிதி தனியே உள்ளது. கோபுரத்தின் உள்புறத்தில் வடபுறம் கலிக்கம்ப நாயனாருக்கும், தென்புறம் மெய்கண்ட தேவருக்கும் தனித்தனியே சந்நிதிகள் உண்டு. பெண் (தேவமாதர்) + ஆ (காமதேனு) + கடம் (யானை) = பெண்ணாகடம். இவை பூசித்தமையால் இப்பெயர் உண்டாயிற்று. இறந்த அந்தணர் வாழும் பதி. கோயிலின் முன்புறம் படுத்திருக்கும் யானையின் முகம்போல் உயர்ந்தும், பின்புறம் யானையின் பின்பாகம் போல் பருத்தும், வட்ட வடிவமுமாக அமைந்துள்ளபடியால் கோயில் தூங்கானைமாடம் எனப்பட்டது. அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய கலிக்கம்ப நாயனார் சிவதொண்டருக்கு அமுது படைக்கும் தொண்டு செய்து பேறு பெற்ற தலம். நாவுக்கரசர் இறைவரை வேண்டியபடி அவர் தோள்களிலே இறைவர் சூலமும், இடபமும் இலச்சினைகள் பொறித்த தலம். சந்தான குரவர்களுக்குள்ளே மெய்கண்டதேவ நாயனாரின் தந்தையாகிய அச்சுதகளப்பாளரும், மறைஞான சம்பந்தரும் அவதரித்து, வாழ்ந்து பேறுபெற்ற தலம்.

பயண வசதிகள் உண்டு. விருத்தாசலம்-திருச்சி மார்க்கம் பெண்ணாகட இருப்புப்பாதை  நிலையத்திலிருந்து 1½  கி.மீ.

நடுநாடு : 2