வடதிருமுல்லைவாயில்

இறைவர் : மாசிலாமணிஈசர், பாசுபதேசுவரர்
இறைவி : கொடியிடைநாயகி

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : சுப்பிரமணிய தீர்த்தம்
தலமரம் : முல்லை

கோயில் சிறிது. இறைவர் தீண்டாத் திருமேனி. சந்தனக் காப்பு இடப்படுகிறது. பூசை எல்லாம் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றன. இங்கு இறைவர் சிறந்த விளக்கத்தோடு எழுந்தருளி உள்ளார். சீகாழிக்கு அருகில் உள்ள தென்திருமுல்லைவாயிலில் இருந்து வேறுபடுத்த, இங்கு தொண்டைநாட்டில் உள்ள தலத்தை, வடதிருமுல்லைவாயில் என்கின்றனர். இத்தலத்தில் ஒருபோது தொண்டைமான் என்னும் பேரரசர், யானையில் இருந்து செல்லும்போது, நிலத்தில் படர்ந்திருந்த முல்லைச்செடி யானையின் காலில் சிக்கிக்கொள்ள, சிக்கலைத் தீர்க்க மன்னன் தன் வாளால் முல்லைக்கொடிகளை வெட்டினான். அப்போது முல்லைக்கொடியினால் மூடப்பட்டிருந்த நாயகர் வெளிப்பட்டார். மன்னன் அவருக்கு அவ்விடத்திலே கோயில் எழுப்பினான். இறைவன் மீது பட்ட அந்தச் சுவட்டை இன்றும் காணலாம். தொண்டைமானுக்கு இறைவன் துணைக்காக உடன் அனுப்பிய நந்தி, பகைவரை எதிர் நோக்கிக்கொண்டு வெளியே (கிழக்கு) பார்த்தபடி இருக்கிறது. பௌர்ணமி தினத்திலே திருவுடை அம்மனை காலையிலும், திருவொற்றியூர் வடிவுடை அம்மனை உச்சியிலும், திருமுல்லைவாயில் கொடியுடை அம்மனை மாலையிலும் வழிபட்டால், எல்லா செல்வதையும் பெறுவார் என்பர்.

இங்ஙனம் இம்மூன்று தலங்களையும் ஒரே நாளில், குறிப்பிட்டபடி வழிபாடு செய்ய, ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பேருந்து, ரயில் வசதிகள் பல உண்டு. சென்னை-கோவை இருப்புப்பாதையில், அம்பத்தூர் நிலையத்தில் இருந்து 5 கி.மீ.

தொண்டைநாடு : 22