திருமணஞ்சேரி

இறைவர் : அருள்வள்ளநாதர்
இறைவி : யாழினும் மென்மொழி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

ஸ்ரீகோகிலாம்பாள் சமேத ஸ்ரீஉத்வாக நாதசுவாமி கோயில் என வழங்கப்படும். சிறிய பழைய கோயில். சித்திரைப் பூசத்தில், பரமேசுவரன், பார்வதி தேவியாரை ஐவகை மணத்தில் ஒன்றாகிய வைதிக முறைப்படி திருமணம் செய்த சிறப்பு மிக்க தலம். ஐம்பொன் விழாத் திருமேனிகள் மிக அழகானவை. செட்டிகுல நாத்தியார் இருவர் கருவுற்று இருந்தபோது, தமக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதாக உறுதி பூண்டிருந்தனர். உரிய காலம் வந்தபோது, ஒருத்தி ஒரு பெண்ணையும், மற்றவள் ஒரு ஆமையையும் பெற்றெடுத்தனர். பெண்ணின் தாய், அவளை ஆமைக்குத் தர மறுத்துவிட்டாள். ஆமை சிவபெருமானை நோக்கித் தவம் இருந்து, மனித உடல் பெற்று, அப்பெண்ணை மணந்தனன் என்பது இங்கு வழங்கும் ஒரு செய்தி. திருமணம் ஆகாத பெண்கள், இந்தத் தலத்திலும், அண்மையில் உள்ள திருஎதிர்கொள்பாடியிலும், திருவேள்விக்குடியிலும் வேண்டுதல் செய்து வணங்கினால், திருமணம் நிறைவேறும் என்பர்.

பேருந்து வசதி உண்டு. மயிலாடுதுறை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையில், குத்தாலத்தில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் இருந்து பேருந்து உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 25