திருவோத்தூர்

இறைவர் : வேதநாகேசுவரர், வேதபுரீசுவரர்
இறைவி : இளமுலைநாயகி, பாலகுஜாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : பனை
தீர்த்தம் : கல்யாணகோடி

பெரிய கோயில். ஏழுநிலை இராசகோபுரம். உட்கோபுரம் ஐந்து நிலை. இரண்டுக்கும் இடையே திருக்குளம்; பாதுகாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கோபுரம் தாண்டி உள்ளே செல்ல தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியை தரிசிக்கலாம். சுவாமி கோயில் பெரிது. பல வாயில்கள். இரண்டாம் பிராகாரம் வடமேற்கு மூலையில் பெண்பனைகளும் வடலிகளும் உண்டு. மேடைக்கு அருகே சிறு சிவலிங்கமும், சிறு நந்தியும் உண்டு. திருஅண்ணா-மலையார், திருக்காளத்தீசுவரர், திருத்தில்லையம்பலவாணர் முதலியோர் பெரிய உருவின் தனிச் சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். கிழக்குப் பிராகாரத்தின் தெற்குப்புறமாக, அம்பாள் திருமுன்னிலையில், பாதி ஆண்பனையும், பாதி பெண்பனையும் செதுக்கப்பட்ட சுமார் 8 அடி உயரமுள்ள சிலை உளது. அதன் எதிரே சம்பந்தர் தாளம் இசைத்து பதிகம் பாடும் பாவனையில் தனியே வேறாய் ஒரு சிலாவிக் கிரகம் உண்டு. ஆண்பனைகளை பெண்பனைகளாக்கி சமணருக்கு காட்டிய ஐதீகத்தை விளக்குகின்றது. இவ்விரண்டு சிலாவிக் கிரகங்களுக்கும் எண்ணைக்காப்பு சாத்தி முறையாக தினமும் அபிஷேக ஆராதனைகள் நிகழுகின்றன.

பயண வசதிகள் மிக உண்டு. செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கம், காஞ்சிபுரத்திலிருந்து 30 கி.மீ வழியில் சேயாற்றைக் கடக்கவேண்டும். பாலம் அமைக்கப்பட்டுள்ளது. வழியில் குரங்கணில்முட்டம், திருப்பனங்காடு முதலிய தலங்களை தரிசிக்கலாம்.

தொண்டைநாடு : 8