திருமயிலாடுதுறை

இறைவர் : மாயூரநாதர், வள்ளலார்
இறைவி : அபயாம்பிகை, அஞ்சல்நாயகி

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 1 = ஆக 3
தீர்த்தம் : காவேரி, இடப் தீர்த்தம்
தலமரம் : மா

கோயில் பெரிது. “ஆயிரம் ஆனாலும், மாயூரம் ஆகாது” என்பது பழமொழி. இறைவி மயில் உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இங்கே கௌரிக்காக இறைவன் கெளரி தாண்டவம் ஆடினார். துலா (ஐப்பசி) மாதத்தில், இத்தலத்தில் காவிரியில் தீர்த்தம் ஆடுவது சிறப்பு. கோயிலுக்கு உள்ளும் திருக்குளம் இருக்கிறது. இங்கு முருகப்பெருமான் சந்நிதி சாந்நித்தியம். கந்தசட்டி விழா சிறப்பாக அநுட்டிக்கப் படுகிறது. மயிலாடுதுறை துலா ஸ்நாந கட்டத்துக்கு வடக்கே 2 கி.மீ தூரத்தில் உள்ள வள்ளலார் கோயிலில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சந்நிதி குறிப்பிடத்தக்கது. தருமபுர ஆதீன 10-ம் மகாசந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞான தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், இங்கு எழுந்தருளிய தக்ஷிணாமூர்த்தி மீது பாடிய திருவருட்பா சொல் இன்பம், பொருள் இன்பம், இசை இன்பம் மிக்கது. இங்கு காவிரியின் இடப தீர்த்தக் கரையில் ஆலயத்தில் விசுவநாதர், துண்டி விநாயகர், பைரவர் முதலியோர் காசியில் போலவே இங்கும் எழுந்தருளி உள்ளனர். காசிக்கு செல்ல இயலாதவர், இங்கு தீர்த்தம் ஆடி, வழிபாடு செய்தால், காசியில் செய்த பயனைப் பெறுவார். சிவபெருமான் நந்தியெம்பெருமான் மீது, யோகாசனத்தில் ஞான முத்திரையுடன் வீற்றிருக்கும் திருக்கோலம் பார்த்து தரிசிக்கத் தக்கது. காவிரியின் செழிப்பினால் எங்கும் தோப்புக்கள், சோலைகள், வயல்கள் சூழ்ந்திருக்கின்றன.

பயண வசதிகள் மிக்க உண்டு. மயிலாடுதுறையில் இருந்து நான்கு திசைகளிலும் உள்ள தரங்கம்பாடி, சிதம்பரம், தஞ்சாவூர், திருவாரூர், இன்னும் திருப்புன்கூர் வழி கும்பகோணம் முதலிய இடங்களுக்கு செல்லும் ரயில், பேருந்துகள் சந்திக்கும் இடம். இவை நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 39