திருவெண்ணெய்நல்லூர்

இறைவர் : தடுத்தாட்கொண்டநாதர்
இறைவி : வேற்கண்ணம்மை

பதிகம் : சுந்தரர் 1

உமாதேவியார் பசுவெண்ணெய்யாலே கோட்டை அமைத்து, அதன் உள்ளிருந்து சிவபெருமானை நோக்கி தவவேள்வி செய்து, பெற்றமையால், இத்தலம் இப்பெயர் பெற்றது. இத்தலத்தில் சைவசித்தாந்த சந்தனாசிரியர் நால்வரில் முதல்வராகிய மெய்கண்டதேவ நாயனார், திருக்கயிலையில் இருந்து ஆகாய வழியாகச் சென்றுகொண்டிருந்த பரஞ்சோதி முனிவரிடம் உபதேசம் பெற்று, சிவஞானபோத சாத்திர நூலை அருளிச் செய்தார்.

திருவருட்டுறை : திருவெண்ணெய்நல்லூரில் உள்ள கோயிலின் பெயர். கடலைத் தாண்ட விரும்புவோரை, தோணியில் ஏற்றியும், இறக்கியும் தொழில் செய்யும் தோணிக்காரன் துறையில் இருப்பது போல, பாவக் கடலைத் தாண்ட விரும்பும் மக்களை கரை சேர்க்கும் இறைவன் தொழில் செய்யும் இடம் ஆதலின் இதற்கு திருவருட்டுறை என்னும் பெயர் ஆயிற்று.

கோயில் பெரிது. அம்மை பூசித்து சிவப்பேறு பெற்ற தலம். திருநாவலூரர் திருமணத்தின் போது சிவபெருமான் முதிய வேதியராய் வேடம் கொண்டு, திருமண வைபவம் நிகழ இருந்த புத்தூருக்கு சென்று, நம்பியின் திருமணத்தைத் தடுத்து, ஆட்கொண்ட தலம். முருகப்பெருமான் இத்தலத்துக்கு எழுந்தருளி, நடன தரிசனம் தந்தது. மெய்கண்டதேவ சந்தனாசிரியருக்கு வேறாகத் தனித் திருமுன்றில் உண்டு.

கடலூர்-சிதம்பரம் இருப்புப்பாதையில் உள்ள பண்ருட்டி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 24 கி.மீ. விழுப்புரம்-செங்கல்பட்டு குறுக்குப்பாதை (Chord line) இலிருந்து திருவெண்ணெய் ரோடு இருப்புப்பாதையில் இருந்தும் வரலாம். நாலு திசைகளிலும் பேருந்துகள் ஓடுகின்றன.

நடுநாடு : 14