திருக்கோடிக்குழகர்

இறைவர் : கோடிக்குழகர், அமிர்தகடேசர்
இறைவி : மையார் தடங்கண்ணி

பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : அமுதவாரி

சிறிய கோயில். குழகர் கோயில் எனவும் வழங்கும். தேவர்கள் பாற்கடல் கடைந்து பெற்ற அமுதத்தின் எஞ்சியதனை வாயுவின் கையில் கொடுக்க, அவன் அதனை வான வீதியால் கொண்டு செல்லும்போது அது கீழே விழுந்து சிவலிங்க உருவாய் அமைந்த தலம். பின் தேவர்கள் வந்து வழிபட்டு அமுதம் பெற்றனர். துர்க்காதேவி சந்நிதி விசேடம். முருகப் பெருமான் ஆறுமுகங்களும் ஒன்றாய்ச் சேர்ந்து, ஒரு திருமுகத்துடனும், ஆறு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார். “கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல், குடிதானயலே யிருந்தாற் குற்றமாமோ?” என்று, அயலே குடியில்லாமல் கோயில் இருக்கும் நிலையை சுந்தரர் பாடியுள்ளார். இப்போ சில மகமதியர் குடியேறியுள்ளனர்.

பயண வசதிகள் குறைவு. கோடிக்கரை வரை ரயிலில் சென்று, அப்பால் கோடிக்கரை இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 1½ கி.மீ வரை நடந்து செல்லவேண்டும். கோயிலிலிருந்து துறைமுகம் கி.மீ தூரம். வேறு பயண வசதிகள் இல்லை.

சோழநாடு, காவிரி தென்கரை : 127