திருப்பல்லவனீச்சரம் (காவிரிப்பூம்பட்டினம்)

இறைவர் : பல்லவனேசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 2

அழகிய சிறிய கோயில். பல்லவ மன்னன் எடுத்த கோயில். அறுபத்து-மூவரில் ஒருவராகிய இயற்பகை நாயனாரின் திருத்தலமாகிய புகார்நலத்தின் அண்மையில் உள்ளது. பட்டினத்தடிகள் அவதரித்து, துறவு பூண்டு, பேறணிந்த திருத்தலம். அவருக்கு தனிக் கோயில் உண்டு. அவருடைய திருநாள், நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டிப்பிள்ளைகளால், மிக அபிமானத்துடனும், சிறப்பாகவும் 10 நாள் பெருவிழாவாக கொண்டாடப் படுகிறது. பட்டினத்தடிகள், மனைவியார், தாயார் பத்திரிகிரியார் ஐம்பொன் திருமேனிகள் எழுந்தருளி உள்ளன. இது காவிரிப்பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் எனப் பெயர் பெரும். பழைய பூம்புகார நகரத்தின் ஒரு பகுதி. கடற்கரை அண்மையில் உண்டு.அண்மையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் பூம்புகார் முதலியன பழைய நிலைக்கு கொணரப்பட்டு, உல்லாசப் பிரயாண மையமாக்கப் பட்டுள்ளது.

பயண வசதிகள் பல உண்டு. சீகாழியிலும், மயிலாடுதுறையில் இருந்தும் பேருந்துகள் உண்டு. சீகாழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் திருவெண்காடு இருக்கிறது. சிதம்பரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில், சீகாழி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 18 கி.மீ. மயிலாடுதுறை-தரங்கம்பாடி மார்க்கம், ஆக்கூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 16 கி.மீ.

சோழநாடு, காவிரி வடகரை : 10
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புகார் (காவிரிப்பூம்பட்டினம்)

பூம்புகார் எனவும் கூறுவார். புகார் சோழர்களது கிழக்குக் கரையோரத்தில், சோழர்களின் செல்வச் செழிப்புக்கு வளம் ஊட்டிய தலைசிறந்த தலைநகரங்களில் ஒன்று. மிகப்பழங்காலத்து தமிழரது நாகரிகம் மிக்க பட்டினம். பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் முதலிய சங்கசங்கமருவிய நூல்களில் இதன் சிறப்பு மிகப்போற்றப்பட்டுள்ளது. கடற்கரை வாணிபமும், தரைவழி வாணிபமும் ஓங்கியிருந்து, பல்வகைக் கலைகள் வளர்வதற்கு நிலைக்களனாக உள்ளது. திருப்பல்லவனீச்சரமும், திருச்சாய்க்காடும் இதன் அமைந்துள்ளன.

பயண வசதிகள் பல உண்டு. சிகாழியில் இருந்து, திருவெண்காடு வழியே, திருச்சாய்க்காடு, திருப்பல்லவனீச்சரம் சென்று, பூம்புகாரை அடையலாம். மயிலாடுதுறையில் இருந்தும் செல்லலாம்.