திருப்புன்கூர்

இறைவர் : சிவலோகநாதன்
இறைவி : சொக்கநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 + சுந்தரர் 1 = ஆக 3

பெரிய கோயில். பெரிய இராச கோபுரம். 2 கி.மீ தெற்கே உள்ள ஆதனூரில் பிறந்து, வளர்ந்த திருநாளைப்போவார் நாயனார் இத்தலத்துக்கு தினமும் சென்று, புறத்தே நின்று வழிபாடு செய்வார். ஒருநாள் இவர் வழக்கம்போல வெளியே நின்று வழிபாடு செய்யும்போது, இறைவர் தம்முன் இருந்த மிகப்பெரிய நந்தியை விலகச் செய்து, காட்சி கொடுத்தது அருளினார். கோயிலின் கிழக்கில், கோபுரத்தின் முன், திருக்குளத்தின் அருகே அவர் நின்று கும்பிட்ட இடத்தில் ஒரு சிறு சந்நிதியில், சிரசின்மேல் கூப்பிய கைகளோடு நின்று, கருவறையில் உள்ள மூலவரை முழுமையாக நேரே தரிசிக்கும் நிலையில் உள்ள திருமேனி, ஏந்திய கைகளுடன், தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். கோயிலுக்கு வெளியே கிழக்கே உள்ள குளத்தை விட, மேற்கே பள்ளமாக இருந்த நிலத்தில், வேறொரு குளத்தை வெட்டி, திருப்பணி செய்தார். சுந்தரரும், ஏயர்கோன் கலிக்காமரும், தனித்தனியே உள் சென்று வழிபட்ட தலம். முதல் மழை பெய்யவும், பின் நிற்கவும் சுந்தரர் பதிகம் பாடினார். கலிக்காமர் இறைவருக்கு 12 வேலிநிலம் வழங்கினார். அவர் அவதரித்த திருப்பேறுமங்கலம், திருப்புன்கூருக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உண்டு. அங்கே ஒரு சிறு சிவாலயம் உண்டு. அங்கே கலிக்காமருக்கு தனிச் சந்நிதி உண்டு.

பயண வசதிகள் உண்டு. வைதீஸ்வரன் கோயிலில் இருந்து கும்பகோணம் சாலையில் 2 கி.மீ தூரம் சென்று, திருப்புன்கூரை அடைந்து, அங்கிருந்து இங்கு செல்லலாம். மணல்மேடு, கும்பகோணம் பேருந்துகள் இவ்வழியே செல்கின்றன.

சோழநாடு, காவிரி வடகரை : 20