திருச்சாய்க்காடு

இறைவர் : சாயாவனேசுவரர், சாய்க்காட்டு நாதர்
இறைவி : குயிலினும் நன்மொழியம்மை, அழகம்மை

பதிகம் : சம்பந்தர் 2 + அப்பர் 2 = ஆக 4
தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்

அளவான அழகிய கோயில். காசிக்கு சமானமாகக் கூறப்படும் ஆறு தென்னாட்டுத் தலங்களுள் ஒன்று. உயர்ந்த மேடையில் உள்ளது. கோயிலுக்கு எதிரில் ஐராவத தீர்த்தம். இங்கு தேவேந்திரன் தாயார் தினமும் வந்து வழிபட்டதாகக் கூறுவார். கோயிலை ஒட்டி, தேர் போன்ற சக்கரங்களுடன் இணைந்த விமானம் உள்ளது. இந்திரன் அதில் வந்து, இக்கோயிலை தன் விண்ணுலகத்துக்கு எடுத்துச்செல்ல முயன்றான். அவன் இங்கு தேவ பூசையை மாற்றி, மானிட பூசையாக ஆக்கிச் சென்றனன் என்பது தல புராணம். சரித்திரப் பெருமை முதலியன சங்க நூல்களில் பேசப் பெறுகின்றது. இயற்பகை நாயனார், அவர் மனைவி வாழ்ந்து, பேறு பெற்ற தலம். அவர்களுடைய திருவுருவங்கள் ஐம்பொன்னில் எழுந்தருளி உள்ளன.

சீகாழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில், திருவெண்காட்டுக்கு 16 கி.மீ தூரத்தில் உள்ளது. சீகாழியில் இருந்து 8 கி.மீ. மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. பேருந்து பயண வசதிகள் உண்டு. திருவெண்காட்டை தரிசித்துக் கொண்டு, திருச்சாய்க்காட்டுக்கும், அங்கிருந்து பூம்புகாருக்கும் கால் நடையாகவே செல்லலாம்.

சோழநாடு, காவிரி வடகரை : 9