திருமுதுகுன்றம்

இறைவர் : பழமலைநாதர், விரித்தகிரீசுவரர்
இறைவி : பெரியநாயகி, விருத்தாம்பிகை, வாலாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 7 + அப்பர் 1 + சுந்தரர் 3 = ஆக 11
தீர்த்தம் : மணிமுத்தாறு
தலமரம் : வன்னி

கோயில் மிகமிகப் பெரியது. விருத்தகாசி, பழமலை, விருத்தாசலம், விருத்தகிரி முதலிய பல பெயர்கள் இத்தலத்துக்கு உண்டு. இறைவன் படைப்பில் இதுவே முதல் மலை ஆதலின் இப்பெயர் பெற்றது. நாலு திசையிலும் நான்கு 7 நிலைக் கோபுரங்கள் உள்ளன. உள்ளே சித்திர மண்டபம் முதலான மண்டபங்கள் பெரியவை, அழகானவை. தேவர், முனிவர் முதலியோர் தியானிக்கும்போது பொழிந்த ஆனந்தக் கண்ணீர் ஆறாகி, மணிமுத்தாறாக பெருகிற்று என்பர். இத்தலத்தில் இறப்பவர்கட்கு இறைவர் மந்திரோபதம் செய்ய இறை இளைப்பாறி அவர்களுக்கு முத்தி தருவார்கள். மணிமுத்தாற்றில் இடப்படும் இறந்தவரது எலும்புகள், பூக்களாக மாறி, இறைவருக்கு திருப்பள்ளித் தாமமாகின்றன. சுந்தரர் இங்கு பெருமானைப் பாடி, 12,000 பொன் பெற்று, அதனை மணிமுத்தாற்றில் இட்டு, திருவருளால் திருவாரூரில் கமலாவயக் குளத்தில் எடுத்து, பரவையாருக்குக் கொடுத்தார். ஆதியில் விபசித்து முனிவரும், பின்னர் செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், குலோத்துங்கன், ராயர், நாயக்கர்களினால் திருப்பணி செய்யப் பெற்றது. நிலமட்டத்துக்குக் கீழே உள்ள ஆழத்துப் பிள்ளையார் ஆலயம் அற்புதமானது. தியாகேசர், நடேசர் திருவிழாத் திருமேனிகள் மிகமிக அழகாக அமைந்துள்ளன.

பயண வசதிகள் மிக்க உண்டு. திருச்சி-சென்னை ரயில் விரைவு வண்டிகள் விருத்தாசலம் ஊடக செல்லும். விருத்தாசலம் சந்திப்பு நிலையத்தில் இருந்து 13 கி.மீ உள்ளது. 4 திசைகளில் இருந்து பேருந்துகள் வருவதும், போவதுமாக இருக்கும் முக்கிய நகரமாகும்.

நடுநாடு : 9