திருஅவிநாசி

இறைவர் : அவிநாசியப்பர், அவிநாசிநாதர்
இறைவி : பெருங்கருணை அம்பிகை, கருணாலயச்செல்வி

பதிகம் : சுந்தரர் 1
தலமரம் : மா, பாதிரி

பெரிய கோயில். பெரிய கோபுரம். பெரிய குளம். பெரிய நந்தி. இராசகோபுரம் அண்மையில் புதிதாகக் கட்டப்பட்டது. உட்பிராகாரத்தில் கூத்தாடும் விநாயகர் கோயில் உண்டு. அம்பிகையின் கோயில் வேறாக வலப்பக்கம். வெளியே அம்மை தவக்கோலத்தில் இருக்கிறார். இரண்டு அந்தணச் சிறுவர்கள் நீராட ஏரிக்குச் சென்றனர். ஒருவனை ஏரியினுள்ள முதலை விழுங்கியது. மற்றவன் தப்பி வீடு சேர்ந்தான். மூன்று ஆண்டுகள் கழித்து அவனுக்கு மங்கல ஒலியோடு பூணூல் அணியும் விழா நிகழ்ந்தது. அப்போது முதலை உண்ட பாலகனின் வீட்டில் இருந்து அழுகை ஒலி கேட்டது. இரு ஒலிகளையும் கேட்டு அங்கு சென்ற சுந்தரர் நடந்தவற்றைக் கேட்டறிந்து முதலைவாய் பிள்ளையை மீட்க அந்த ஏரிக்கு சென்றார். அங்கு எரிக்கரையிலிருந்து பதிகம் பாடி முதலையினின்றும் பிள்ளையை மீட்டார். அந்த ஏரி இப்பொழுது தாமரைக்குளமாக இருக்கிறது. ஏரிக்கரையில் சுந்தரர் கோயில் இருக்கிறது. அங்கே பிள்ளையை முதலை வாயிலினின்றும் மீட்ட வரலாறு சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலினுள்ளும் இத்தகைய பல சிற்பங்களை காணலாகும். நந்தி பெரிய அளவில் இருக்கிறது. ஆறுபத்து நான்மார் திருமேனிகள் ஐம்பொன்னில் வார்க்கப்பட்டுள்ளன.

கொங்கு நாட்டிலே திருப்பூர் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 13 கி.மீ. ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் முதலிய இடங்களிலிருந்து ரயில், பேருந்து வசதிகள் மிக உண்டு.

கொங்குநாடு தலம் : 1