திருஆனைக்கா (ஜம்புகேசுரம்)

இறைவர் : ஆனைக்கா அண்ணல், ஜம்புகேசுவரர்
இறைவி : அகிலாண்டேசுவரி

பதிகம் : சம்பந்தர் 3 + அப்பர் 3 + சுந்தரர் 1 = ஆக 7
தீர்த்தம் : காவிரி

மிகப்பெரிய கோயில். மேற்கு நோக்கிய சந்நிதி. இணைந்து தனியே இருக்கும் அம்பாள் கோயிலும் பெரிது. கோபுரம் பெரிது. பஞ்சபூதத் தலங்களுள் இது அப்புத்தலம். கருவறையில் எந்நேரமும் நீர் ஊறிக்கொண்டே இருக்கும். வீராட்புருடனுடைய சுவாதிட்டான நிலையம். வெள்ளை யானை, வெண் நாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த இறைவரை, தினமும் காவிரி நீர் கொண்டு நீராட்டி வழிபட்டதனால் ஆனைக்கா என்றும், வெண் நாவல் மரத்தின் கீழ் இறைவர் எழுந்தருளியிருப்பதால், ஜம்புகேஸ்வரம் என்றும் பெயர்கள் உண்டாயின. முற்பிறப்பிலே சிலந்தியாய் இருந்து சிவபெருமானுடைய திருமேனியில் சருகு முதலிய விழாமல் பந்தல் இட்டு வழிபட்ட சிவபுண்ணியதினால், சோழ மன்னனுக்குப் பிறந்து, கோச்செங்கட் சோழர் என்னும் பெயர் பெற்ற அரசர் எழுப்பிய கோயில். அவ்வாலயத்திலே சிவபெருமான் ஒரு சித்தராக எழுந்தருளி, திருப்பணி வேலை செய்தோருக்கு திருநீற்றையே கூலியாகக் கொடுத்துக் கட்டுவித்தமதில், “திருநீற்றுமதில்” என்றும் பெயர் உண்டு. அம்பாள் இறைவனைப் பூசித்த வரலாற்றை விளக்க இன்னும் உச்சிக்காலப் பூசையின் போது, அம்பாள் கோயில் அர்ச்சகர், பெண்வேடம் தரித்து, அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, சுவாமி கோயிலுக்கு சென்று பூசை செய்யும் வழக்கம் உண்டு. உறையூர் சோழ மன்னன், தன்னுடைய முத்துமாலையோடு காவிரியில் நீராடும் போது, அது கழன்று ஆற்றிலே நழுவி விட்டது. இதனை உணர்ந்த மன்னன், “இறைவா முத்துமாலையை நீயே எடுத்துகொள்” என்றான். பின் கோயில் சிவாசாரியார், ஜம்புகேசுவரின் திருமுக்குக்கு காவிரியில் நீர் மொண்டபோது, நீருடன் குடத்துள் அகப்பட்ட மன்னனின் முத்துமலை இறைவனுக்கு அபிடேகம் ஆகும்போது இறைவருக்கு மாலையாக விழுந்தது.

முற்பிறவி நினைவுடன் அவதரித்தமையால், மீண்டும் யானை தான் கட்டிய பந்தரை அழியாதிருக்க, கோயிலினுள் அது செல்லாதிருக்க, கோச்செங்கண்ணான் 78 கோயில்களை மாடக் கோயில்களாக எழுப்பினான்.

திருவரங்கம் அண்மையில் உண்டு. ஸ்ரீரங்கம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கிழக்கே 1 கி.மீ. சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும். ரயில், பேருந்து பயண வசதிகள் ஏராளம் உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 60