திருவைகாவூர் (வில்வவனம்)

இறைவர் : வில்வவனநாதர்
இறைவி : வளைக்கைநாயகி, பூவைவல்லி, பவளக்கைநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம், உத்தாலமரம்
தீர்த்தம் : இமய தீர்த்தம்

அளவான கோயில். ஒரு சிவராத்திரி அன்று ஒரு வேடன் எங்கும் திரிந்தும் வேட்டை ஒன்றும் கிடையாமையால், ஒரு குளத்தின் அருகே உள்ள வில்வமரத்தில், அங்கு நீர் அருந்த வரும் மிருகங்களை வேட்டையாடலாம் என நினைத்து அதில் ஏறி இருந்தான். அவனுக்கு வரக்கூடிய தூக்கத்தை ஒழிக்க அவன் அந்த வில்வமரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக ஒடித்து, கீழே போட்டுக் கொண்டிருந்தான். கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது அவனுக்குத் தெரியாது. அவன் இரவு முழுவதும் இட்ட வில்வத் தளங்கள் அந்த சிவலிங்கத்தின் சிரசில் வீழ்ந்தன. விடிந்ததும் சிவபெருமான் அவ்வேடனுக்கு அநுக்கிரகம் செய்தார். பகல் முழுவதும் வேட்டை கிடையாமையால், உணவு இல்லாமலும், உயிர்க் கொலை செய்யாமலும் இருந்தபடியாலும், இரவு முழுவதும் தூங்காதிருந்து வில்வத் தளங்களை சிவபெருமான் சிரசில் இட்டமையால் அது சிவலிங்க பூசை ஆனமையாலும், சிவராத்திரி விரதப் பயனை அவ்வேடன் அபுத்திபூர்வமாகவேனும் பெற்றமையால் அவன் சிவபதம் அடைந்த தலம். இங்கு சிவராத்திரி மிகப் பக்தி சிரத்தையுடன் அநுட்டிக்கப் படுகிறது. அதனாலே இவ்வூருக்குள் யமன் வரக்கூடாது. ஓமாம்புலியூரிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுவார். நந்திகள் புறம்நோக்கி நிற்கின்றன. ஆறுமுகப் பெருமான் மிகமிக அழகாக இருக்கிறார்.

பயண வசதிகள் (பேருந்துகள்) பல உண்டு. மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம் சுந்தரப்பெருமாள் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 7 கி.மீ. விசயமங்கையில் இருந்து 3 கி.மீ.

காவிரி வடகரை : 48