திருப்புகலூர்

இறைவர் : அக்கினீசுவரர், புகலூர்ப்புண்ணியன், கோணப்பிரான்
இறைவி : கருந்தாட்குழலி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 5 + சுந்தரர் 1 = ஆக 8
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

கோயிலும், கோபுரமும் பெரியன. கிழக்கு, மேற்கு, வட புறங்களில் கல்லால் கட்டப்பட்ட அகழி இருக்கின்றது. இறைவர் சுயம்பு. சற்றே சரிந்திருக்கிறார். சந்திரசேகர் கோயில் சிறப்பாய் உள்ளது. எதிரில் அக்கினி தேவர் திருவுருவம் உண்டு. திருநாவுக்கரசர் அங்கு எழுந்தருளி உள்ள சிவனோடு கலந்து, “புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே” என்று போற்றி, “நண்ணரிய சிவானந்த ஞான வடிவே” ஆகினார். அவருடைய திருமேனிகள் மிகமிக சாந்நித்தியமாக விளங்குகின்றன. அவர் உழவாரத் தொண்டு செய்யும்போது, அவரை மயக்கத் தோன்றிய பொன்னையும், மணிகளையும் கையினால் தீண்டாது, உளவாரத்திலேயே ஏந்தி, “பூங்கமல வாவியினப்புக” எறிந்தார். தேவமாதர் விண்ணில் இருந்து இறங்கி, ஆடல்-பாடல்களால் அவரை மயக்க முயன்றபோது, “நான் திருவாரூர் ஐயனுக்கே அல்லால் உங்களுக்கு ஆட்படேன்” என்று பாட, அவர்கள் தோற்று மீண்டனர். இங்கு சித்திரை சதயத்தை முன்னிட்டு, பத்து நாள், நாவுக்கரசரது வாழ்க்கையை விபரிக்கும் திருவிழா (திருவதிகையில் போல்) நிகழ்கிறது. வைகாசி விசாகத்தை வைத்து, பத்து நாள் பிரமோற்சவம் நிகழுகிறது. சுந்தரர் தலையணையாக வைத்துப் படுத்த செங்கல், பொற்கற்களாக மாறின. முருகநாயனார் பிறந்து, பூக்கள் எடுத்து, விதம் விதமான மாலைகள் புனைந்து, இறைவர்க்கு கொடுத்து, பேறு அடைந்த திருத்தலம். இங்கு அவருடைய திருமடம் ஒன்று இருந்தது. அம்மடத்தில் நாயனார், சம்பந்தர், நாவுக்கரசர், சிறுத்தொண்டர், நீலநக்கர் முதலிய நாயன்மார்களையும் எழுந்தருளச் செய்து, அவர்களுக்கு பலநாள் அமுது படைத்தது, உபசரிக்கும் பெரும்பேறு பெற்றவர்.

பயண வசதிகள் பல உண்டு. நன்னிலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. மயிலாடுதுறை, வேதாரணியம் முதலிய இடங்களில் இருந்து பேருந்துகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 75