பாபநாசம் (பொதியமலை)

தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிக்கு அருகில் உள்ளது. “குற்றாலம் பாபநாசம்” என்று குற்றாலத்தோடு சேர்த்துப் பேசப்படுவது. பெரிய கோயில். பெரிய கோபுரம். தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது. மக்கள் நீராடுவதற்கு வசதியாக படித்துறை கட்டப்பட்டுள்ளது. இயற்கை வளமும், காட்சிகளும் நிறைந்து அழகு கொழிக்கும். பொதியமலைச் சாரலில் அகத்தியர் தவச்சாலை இருந்ததாகக் கூறுவார். அங்கிருந்து தமிழ் வளர்த்தார் என்பர். அவருக்கு இறைவன் தம் மணக்கோலத்தை காட்டி மகிழ வைத்தனன். தீர்த்தம் தாமிரபரணி. சித்திரை மாதம் முதலாம் தேதியில் நடக்கும் திருமணக்காட்சி விசேடம். நீராடும் துறையில் சிறியனவும், பெரியனவும் ஆகிய மீன்கள் எவருக்கும், எதற்கும் பயம் இல்லாமல், துள்ளி விளையாடுவது வியப்பாக இருக்கும். இங்கிருந்து மேல் அணைக்கட்டுக்குப் போகும் வரையும் வானளாவிய விருட்சங்களும், மலைகளும் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவன. மலைமேல் இருந்து வீழும் நீரைக்கொண்டு நீர் மின்சக்தி உண்டாக்கப் படுகிறது. இங்கிருந்து மலைமேல் அணைக்கட்டு வரை பேருந்து சேவை உண்டு.