பெயரிடுதல், மரபுவழி

நம்பியாரூரர் – இது ஆலால சுந்தரர் பூமியிலே பிறந்த பொழுது பெற்றோராகிய சடையனார், இசைஞானியார் இட்ட பெயர். திருவாரூர் பெருமானுக்கு அடிக்குடியான உள்ள குடியிலே வந்தமையால் இப்பெயர் இக்குடியிலே வரும் பிள்ளைகளுக்கு இட்டனர். இவர் பாட்டனாருக்கும் (பேரனார்) இப்பெயர் இருந்தமை காணலாம். தனது பெயரை, தன் மகன் மகனுக்கு தருதலால், இவரை பேரனார் (பெயரனார்) என்பது மரபு. திருவாரூர் பெருமானது பெயரை அவரது அடிக்குடியாகிய நம்பிகளது மரபிலே பிள்ளைகளுக்கு இட்டு அழைத்து வந்தனர்.

கடவுளார் (நடராஜா, பசுபதி, சிவகுமாரன்), பெரியோர் (சம்பந்தன், திருநாவுக்கரசு, திலகவதி, மங்கையர்க்கரசி), தலங்கள் (சிதம்பரம், பழனி, திருத்தணி), மலைகள் (திருவண்ணாமலை, அருணகிரி, வேதகிரி, மறைமலை) முதலிய பெயர்களையும் இட்டு மகிழ்வர் பெற்றோர். இது தொன்று தொட்டு நன் ஆன்றோரிடம் வழங்கி வந்த நமது நாட்டு வழக்கு. இம் மரபு மிக விரைவாகவும், முற்றாகவும் அழிந்து வருகிறது.