உருத்திரம்

திருவுருத்திரம்; வேதங்களின் சரிநடுவில் உள்ள மந்திரப்பகுதி. அரிய வேதங்களின் ஒரு கூறாயும், அதன் நடுவண் இருப்பதாயும், அதன் இதயமாகவும், அதன் பயனையும் விளங்கும் திருவுருத்திரம் என்ற பகுதி.

அருமறை உருத்திரம்
உருதிரத்தை இதயத்தில் கொள்ளுவதனால், மறை பெருமை உற்றது. உடலும் உயிரும் போல, மறையும் உருத்திரமும் ஆவன. வேதபுருடனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்கரம் கண்மணியுமாம். வேதம் நான்கும், வேதாங்கம் ஆறும், நியாயம், மீமாஞ்சை, மிருதி, புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதங்களே மேலானவை. அவற்றுள்ளும் உருத்திரை காதசனி மேலானது. அதனுள்ளும் ஐந்தெழுத்து மேலானது. அதனுள்ளும் “சிவ” என்ற இரண்டெழுத்தே மேலானது (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் உருத்திரபசுபதி நாயனார் ஆசனம்).

வேதம் மூன்று என்ற முறையில், அவற்றுள் நடுவானது யசுர் வேதம். அதன் ஏழு காண்டங்களில் நான்காவதனுள் நடுவனதாகிய பதினோராவது அநுவாதத்தின் நடுவனதாகிய ஆறாவது சூக்கத்தில் விளங்குவது திருவுருத்திர மந்திரம். அதன் நடுவில் விளங்குவது சீபஞ்சாக்கரமும், அதன் நடுவில் இருப்பது “சிவ” என்ற திருநாமமுமாம். “சிவசிவ என்றிடத் தீவினை மாளும்” என்று பலவாற்றினும் திருமந்திரத்தினுள் துதித்தனர் திருமூலர். வேதபுருடன் சிவனை இதயத்தில் வைத்துப் போற்றுகின்றான் என்பதும் இக்கருத்து பற்றியது.

பின்னிரு திருமுறைகளிலே, ஏழு திருமுறைகள் மூவர் முதலிகள் அருளிச்செய்த தேவாரங்களாகும். இவற்றுள் நடுவாக அமைந்திருப்பது நான்காம் திருமுறையாகும். இத்திருமுறைகளில் உள்ள 100 திருப்பதிகங்களில் 51-ஆவது பதிகமாகிய திருப்பாலைத்துறை திருக்குறுந்தொகைப் பதிகம் நடுவண் அமைந்துள்ளது. இப்பதிகத்தின் பதினொரு திருப்பாடல்களில் நடுவில் விளங்கும் பாடலின் நடு, இரண்டாம் வரிக்கடைசியில் “சிவாய” வருவது மிகச்சிறப்பு.

மேலும் ஸ்ரீருத்திரம், தமிழ்மொழியில் அப்பர் பெருமானால், ‘நின்ற திருத்தாண்டக’மாக அருளப்பெற்றது. அதனை உருத்திர திருத்தாண்டகம் என்றே அழைக்கலாம். “மறைப்பயனாகிய உருத்திரம்” என்பர் சேக்கிழார் நாயனார். இத் திருத்தாண்டகப் பதிகம் முழுவதும், உயிர்ப்பொருள், உயிரில் பொருள் என்னும் எல்லாவற்றுள்ளும் சிவன் கலந்து நிற்கும் தன்மையை எடுத்துத் துதித்தருளுகிறது. இதனை அன்புடன் ஓத, முத்தி நிச்சயம் என்பர். இதனை ஓதியே திருத்தொண்டர் அறுபத்து-மூவரில் ஒருவராகிய உருத்திரபசுபதி நாயனார் திருவடி சேர்ந்தார். உபாசனைக்குரிய திருப்பதிகம், சிவபெருமானின் விசுவரூபத்தை சொற்களால் விவரித்து, வணக்கம் கூறுவது ஆகும்.

“அரனே முதற் கடவுள்” என்ற சிவஞானபோத முதற் சூத்திரப்பொருளையே உருத்திரன் – பரமன் – என்ற வகையால் எடுத்துக் கூறுவது திருஉருத்திர மந்திரமாகும். இதனுள் உயிர்ப்பொருள், உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்துக்கூறி, அவை யாவையினுள்ளும் கலந்து விளங்கும் சிவனுக்கு “நாம” என்று வணக்கம் கூறும். இக்கருத்துப் பற்றியே தமிழ் வேதமாகிய “நின்ற திருத்தாண்டகமும்”, இருநிலனாயத் தீயாகி நீருமாகி” என்பது முதலாக (உயிர்ப்பொருள், உயிரில் பொருள் என்னும்) எல்லாவற்றுள்ளும் சிவன் கலந்து நிற்கும் தன்மையை எடுத்து துதித்தருளிற்று.