திருமங்கலம்

இறைவர் : ஸ்ரீசாமவேதீஸ்வர சுவாமி
இறைவி : ஸ்ரீ லோகநாயகி அம்பாள்

தீர்த்தம் : கயாற்குணி,
தலமரம் : பலா

காவிரிக்கு வடகரையில் உள்ளது. ஆனாய நாயனார் அவதரித்து, வேய்ங்குழலில் சிவநாமத்தை அமைத்து, வாசித்து, சிவபதம் அடைந்த தலம். அளவான கோயில். 3 நிலை இராச கோபுரம். பழைய சோழ அரசர்களால் எழுப்பப் பட்டது. அகலமான இரண்டாம் பிராகாரத்தை சுற்றி பெரிய திருமாளிகைப்பத்தி. இரண்டாம் பிராகாரத்தில் ஆழமான கிணறு ஒன்று உண்டு. முன் பரசுராமர் திருக்குளமாக இருந்தது என்பர். பொன்னொச்சி, நித்தியகல்யாணி, மல்லிகை முதலிய பூக்களை கொத்தாகப் பூக்கும் அழகிய பூச்செடிகள் உண்டு. வாகனங்கள், கொடிமரம் முதலியன இருந்தும், பிரமோற்சவம் இல்லை. ஆனாயர் கொன்றை மரத்தின் நிழலிலே வேய்ங்குழல் வாசித்துக் கொண்டிருக்கும் சிலா மேனி அழகாக செதுக்கப்பட்டு, வட-மேற்கு சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இவ்விடத்தில் தான் அவர் அவதாரம் செய்து, வேய்ங்குழலில் சிவநாமத்தை வாசித்து, சிவபெருமானால் தம் அருகே நின்று, குழல் இசைக்க, திருவருள் பாலிக்கப் பெற்றவர். விழாத் திருமேனியும் உண்டு. சிவபெருமானின் அருகில் எப்போதும் இருக்கும் மாபெரும் சிவப்பேறு இவருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் மாத்திரமே அருளிச் செய்யப் பெற்றது. நாயனாரின் கோயிலின் அருகே, “ஆனாயனாருக்கு முத்தி கொடுத்த அம்பாளி”ன் சந்நிதி உண்டு. நாயனாரின் புராணம் கல்வெட்டில் அமைக்கப் பெற்றுள்ளது. அக் கல்வெட்டில் தரப்பட்டுள்ள பிற செய்திகள் : மூர்த்தி – முழுவுடைநாயகர்,  மறுவுடைநாயகி. தலம் – பனசவனம். சண்டேசுவரரின் பிரமஹத்தி நீங்கியது. ஆனாயர் முத்தி அடைந்த நன்னாள் : கார்த்திகை அத்தம். இங்கே எழுந்தருளி உள்ள முருகன் கல்யாண சுப்பிரமணியர். முருகனுக்குப் பதிலாக வள்ளி நயகியாரே மயில் வீதி வர்ந்து, வலப்பக்கத்தில் உள்ளார்.

பயண வசதிகள் உண்டு. திருச்சி-விழுப்புரம் இருப்புப்பாதையில், லால்குடி நிலையத்தில் இருந்து, பூவாளூர் வழியாக செல்ல வேண்டும். கோயிலுக்கு அண்மையில் ஒரு கூப்பிடு தொலை நடந்து செல்ல வேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை