தாராசுரம் (ஐராவதேசுவரர் கோயில்)

இறைவர் : ஐராவதேசுவரர்

சோழ நாட்டில் காவிரிக்கு தென்கரையில் உள்ளது. சோழர் காலத்திய தமிழ்நாட்டுக் கட்டட சிற்பக்கலையின் உயர்சிக்கும், சிறப்புக்கும் சான்றாக விளங்குகிறது. இது ஒரு அற்புதமான கோயில். இரண்டாம் ராஜராஜன் (1150-11173) எழுப்பியது. ராஜராஜேச்சரம் என்பது இதன் முதல் பெயர். கோயிலின் கருவறை, மகாமண்டபம் முதலியவற்றுக்கு செல்லும் நுழைவாயிலை அடைய, தென் பிராகாரத்தில் உள்ள படிக்கட்டு வழியே ஏறிச் செல்ல வேண்டும். கல்லில் குதிரை, கற்யானைகள் பூட்டிய தேர் வடிவில் இரு பக்கங்களிலும் படிக்கட்டுக்கள் உண்டு. முகமண்டபம் சற்றே வெளிவாங்கியது. உயர்ந்த மதில் சுவர், திருமாளிகைச்சுற்று, வெளியே நந்தி மண்டபம், பலிபீடம் முதலியன சிறப்பாய் அமைந்துள்ளன. கருவறையின் மூன்று சுவர்களின் புறத்தே, போதிகையில், அறுபத்து-மூன்று நாயன்மார்களின் வரலாறுகள் புடைச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. இது வேறெங்கும் காணமுடியாத சிற்பம். விமானம் 5 தளம் கொண்டது. அர்த்த மண்டபம், மகாமண்டபம், ராஜகம்பீர மண்டபம் என்னும் தேர் மண்டபம் முறையாக கல்லாலே நிர்மாணிக்கப் பட்டுள்ளன. அம்பாள் கோயில் வேறாக வெளியே அண்மையில் இருக்கிறது. இக்கோயிலும், தஞ்சை இராஜராஜேச்சரம், கங்கைகொண்ட சோழேச்சரங்கள் போல், இந்திய மத்திய அரசின் ஆட்சிக்கு உள்பட்டது. சீரமைப்புப் பணிகள் நடைபெற்று, இடையில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன (1991). சிவாசாரியார், காவல்காரர் முதலியோர் இருந்தும் பூசனைகள் நடைபெறுவதில்லை. அரும்பெரும் காட்சிசாலை ஒன்று உண்டு.

இக்கோயில் கும்பகோண நகரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

சோழநாடு, காவிரி தென்கரை