திருவாதவூர்

இறைவர் : திருமறைநாத சுவாமி
இறைவி : வேதநாயகி

மணிவாசகப் பெருமான் திருஅவதாரம் செய்த திருவூர். பாண்டி நாட்டிலே, அதன் தலைநகராகிய மதுரைக்கு அருகே பாயும் வைகை ஆற்றின் வடகரையிலே, வயல்களில் நடுவே, சிறுகுடிகளை உடையதாய் விளங்குவது திருவாதவூர் என்னும் பழம்பதியாகும். அங்கே ஒரு பழமையான சிறிய கோயில் உண்டு. கடைத் தெருவு இல்லை. கோயிலுக்கு எதிரே தீர்த்தக் கேணி உள்ளது. சுற்றுமதில், திருமாளிகைப்பதி, கல்யாணமண்டபம், மணிவாசகருக்கு தனிச்சந்நிதி, பரிவாரமூர்த்தி சந்நிதிகள் முதலியவற்றோடு கூடிய கோயிலின் இரண்டாவது திருச்சுற்றிலே இராச கோபுரத்தின் அருகே, பத்துத் தூண்களோடு ஒரு பழைய மண்டபம் உண்டு. அதின் அமைப்பும், காணக்கூடிய கொடுங்கைகளும் திருப்பெருந்துறையில் காணக்கூடியவை போல, அதனை நினைவூட்டுகின்றன. இரண்டாம் திருச்சுற்றில் தென்னை மரங்களும், மகிழமரம் ஒன்றும், நிழலும், குளிர்ச்சியும் தருகின்றன. அருகருகே அருள்மிகு வேதநாயகி கோயிலும், அருள்மிகு ஸ்ரீகாளீஸ்ரர் (இலிங்கத் திருமேனி) கோயிலும், சிறிய அளவில் நந்தி பலிபீடங்களும் எழுந்தருளி உள்ளனர். திருச்சுற்றின் வடக்கே அழகிய நந்தவனம் உண்டு. தரிசிக்க வேண்டிய சிறந்த கோயில்கள்.

இக்கோயிலில் இருந்து ஒரு கூட்படு தொலைவில் திருவாதவூரர் பிறந்ததாகக் கருதப்படும் இடம் உளது. ஒரு பெரிய அலங்கார வளைவினால் அடையாளங் காட்டப் பட்டுள்ளது. உள்ளே மணிவாசகப் பெருமான் எழுந்தருளி இருக்கும் ஒரு சிறிய தனிக் கோயில் உண்டு. கோயில் சிறிதாயினும் பூசை முதலியன சீராக நிகழுகின்றன.

பயண வசதிகள் உண்டு. மதுரை நகருக்கு வடக்கே வைகை ஆறு ஓடுகிறது. அதற்கும் வடலே திருவாதவூர் இருக்கிறது. மதுரை நகரில் உள்ள பெரியார் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், வைகைக்கு வடக்கில் இருக்கும் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் பல ஓடுகின்றன.