ஆதிசைவர்

மாதொரு பாகனார்க்கு அகம்படித் தொண்டு தவிர வேறு தொழில் செய்யார். இவர்களைப் பற்றி, புகழ்த்துணை நாயனார் புரணாத்திலேயும், முப்போதும் திருமேனி தீண்டுவார் புரணாத்திலேயும் கூறியவாற்றால், பிரமதேவர் முகத்திலிருந்து தோன்றிய ஏனைய வேதியர் போலல்லாமல், இவர்கள் சிவபெருமானது ஐந்து திருமுகங்களின் நின்றும் அதிகரித்து வந்தமையும், ஆகமங்களின் வழியே சிவபெருமானை அர்ச்சிக்க உள்ள இவர்களது உரிமையும், பிறவும் விளங்கும். இவர்கள் மகாசைவராகிய ஏனைய வேதியரிடம் இருந்து பிரித்து, உணர்தற் பொருட்டு, “வழிவழியடிமை செய்யும் வேதியர்” எனப்பட்டனர். இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரந்துவாசற், கௌதமர் என்ற ஐவரின் கோத்திரம் கொண்டவர்கள். இவ் ஐவரும், இப்பேர் கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர். இவர்கள் சிவமரபினர். இவர்களுக்கும் வேத பாரம்பரியம் உண்டு என்பதை உணர்த்த, வேதியர் குலம் எனப்பட்டது.

பிரமதேவர் முகத்தினின்றும் தோன்றிய வேதியர் வேறு. சிவவேதியர் வேறு. பிரமன் வழித்தோன்றியவரே, தக்க யாகத்தில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள் வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால் சபிக்கப் பெற்றும், இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள். இவ்வேதியர்கள், மேல் சொல்லிய எவ்வித சிவ அபராதங்களுக்கு உட்படாதவர்களாய், சிவபெருமானை எப்போதும் ஆன்மார்த்தம், பரார்த்தம் என்ற இருநிலையிலும் வழிபட்டு, சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள்.