திருவெண்பாக்கம்


இறைவர் : வெண்பக்கநாதர், ஊன்றீசுவர்
இறைவி : கனிவாய்மொழியம்மை, மின்னலொளியம்மை

பதிகம் : சுந்தரர் 1

அளவான கோயில். திருவொற்றியூரிலே, மணம் செய்வதற்கு முன்னே, சங்கிலியாருக்கு, “யான் பிரியேன்” என்று கொடுத்த வாக்கை மீறி, பரவையாரை நினைத்து, திருவாரூர் செல்லத் தொடங்கிய சுந்தரர், தம் கண்கள் பார்வை இழக்கப் பெற்றார். அப்போது அம்மையாரின் திருவருளால் வந்து, சேர்ந்த தலம் இதுவாகும். மனம் வருந்தி, சுந்தரர் இறைவரை நோக்கி, தம் குறை இரந்து, “திருக்கோயிலில் உள்ளீரோ” என்று பாட, இறைவரும், “உளோம் போகீர் என்றானே” என்று கூற, இறைவர் ஊன்றுகோல் ஒன்றினை உள்ளே இருந்து வெளி வீசினார். அது அங்கிருந்த நந்தியின் கொம்பு ஒன்று முறிய, அதனுடன் இருக்கிறார். பள்ளமாக இருந்த இத்தலம், இப்போது “சத்தியமூர்த்தி சாகர்” என்ற பெயருடன், சென்னைப் பட்டினத்துக்கு நன்னீர் வழங்கும் குடிநீர் தேக்கமாக ஆக்கப்பட்டுள்ளது. பழைய கோயில் திருமேனிகள், தேக்கத்தின் கரையில், புதிதாகக் கட்டப்பட்ட கோயிலில் எழுந்தருளப் பெற்றுள்ளன. பழைய ஆலயத்தின் தூபி, உயர்ந்த பகுதிகள் முதலியன, தேக்கத்தின் நீர்மட்டம் தாழ்ந்தபோது, கரையில் நின்று பார்பவர்களின் கண்களுக்கு புலப்படும். இன்னும் சிலவேளைகளில், அக்கோயிலுக்கே போய் வரக்கூடியதாகவும் இருக்கும். எரிக்கரையில், ஓர் இடத்திலே நல்ல அருமையான குளிர்ந்த சோலை ஆக்கப்பட்டு, திரு சத்தியமூர்த்தியின் உருவச்சிலை நிறுவப் பட்டுள்ளது.

பயண வசதிகள் உண்டு. சென்னை-திருவாலங்காடு-அரக்கோணம் பேருந்துகள் இவ்வழியாற் செல்லுகின்றன. திருவள்ளூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 20 கி.மீ தூரம்.

தொண்டைநாடு : 17