உபமன்னிய முனிவர்

நடேசப்பெருமானின் திருவருள் பெற்ற புலிக்கால் முனிவரின் செல்வப் புதல்வர். தாயார் வசிட்ட முனிவருடைய தங்கை. உபமன்யு என்னும் சற்புத்திரரை வசிட்ட முனிவரின் மனைவியாகிய அருந்ததியார் தம் ஆசிரமத்திலே, காமதேனுவின் பாலைக் கொடுத்து வளர்த்து வந்தார். ஒருநாள் வியாக்கிரபாதர் தம் புதல்வனை, தம் ஆசிரமத்துக்கு கொணர்ந்து, கிழங்கு, பழம் முதலியவற்றை தர, குழந்தை அவற்றை வெறுத்து, காமதேனுவின் பால் வேண்டும் என்று அழுதது. திருத்தில்லை திருமூலட்டானருடைய திருவருளினாலே, திருப்பாற்கடலைப் பெற்று மகிழ்ந்து, அதனை உண்டு வளர்ந்தவர். சிவனையே தொழும் பான்மையர்.

சிவபெருமான் விரும்பி எழுந்தருளி இருக்கின்ற தன்மையும், பெருமையும் பொருந்திய திருக்கயிலாய மலையின் ஒரு சாரலிடத்து, இன்ன தன்மையன் என்றறியா அச்சிவன் தன்னையே உணர்ந்து, யோகத்திலே கண்டுகொண்டு, யோகியர் சூழ்ந்திருக்கும் வேளையிலே, ஆயிரம் ஞாயிற்றின் ஒளிபோல் ஒரு பேரொளி தோன்றிற்று. அப்போது அங்கே இருந்த துங்க மாதவர்கள் எல்லாரும், “இது என்ன அதிசயம்” என்று சொல்லி வியக்க, உபமன்னிய முனிவர், “தென் திசையில் இருந்து வருகின்ற இவன் நாவலர்கோன். வன்தொண்டன். எந்தையார் அருளால் இங்கு வருகிறான்” என்று சொல்லி, தம் இருகை கூப்பி வாங்கினார். அப்போ முனிவர்கள் உபமன்னிய முனிவரை நோக்கி, “சம்புவின் அடித்தாமரை போதல்லால் இறைஞ்சாய் இஃதென்?” என வினவ, “நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையான்” என்று பதிலிறுத்தார். மாதவரின் விருப்பப்படி முனிவர், சுந்தரர் சரிதத்தையும், திருத்தொண்டர் சரிதத்தையும் விளக்கினார்.

உபமன்னிய முனிவர், யாதனும், துவாரகாபுரித்து அரசனுமாகிய கண்ணனுக்கு திருவடி தீக்கை செய்தவர். திருவடி தீக்கை இல்லாது, கண்ணன் யமுனை ஆற்றங்கரையில், வைதிக முறைப்படி சிவபூசை செய்தார். அவர் பூசித்தபின் அந்த மலர்களை யமுனை ஆற்றிலே இட்டார்கள். அவை அவ்வாற்றின் வழிச் சென்றன. அவற்றை உபமன்னிய முனிவர் எடுத்து சிவபூசை செய்ய, அவை கண்ணன் பூசித்த நின்மாலியம் என்று கேட்டபோது, “அவனுக்கு சிவதீக்கை இல்லை. ஆதலினால் அவன் பூசித்த பூக்களுக்கு நிர்மாலிய தோடமில்லை. அவை நின்மாலியமாகா” என்று சொல்லி, பூசையை முடித்தனர். அது கேட்ட கண்ணன், தான் இதுகாலும் செய்த சிவபூசை பயனற்றுப் போனதை எண்ணி வருந்தி, அம்முனிவரை அடைந்து, சிவதீக்கை செய்து கொண்டனன்.