ஆதி சித்சபை நடனம்

ஆதி சிதம்பரம் எனப்படும் திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோயிலில் உள்ள நடனசபை ஆதிசித்சபை எனப்படும். இக்கோவிலில் நடராசசபையில் இரகசியத் திரை உளது. இச்சபையில் நாடொறும் படிகலிங்கத் திருமேனிக்கு 4 கால அபிடேகம் உண்டு. இங்கு எழுந்தருளி உள்ள நடேசர் ஆடவல்லான் எனப்படுவர். சிதம்பரத்தில் உள்ளது போலவே இங்கும் சபைக்கு அருகில் திருமால் திருமுன் உண்டு. இச்சபை சிதம்பரம் சித்சபைக்கு காலத்தால் முந்தியது என்பர். பாண்டி நாட்டு உத்தரகோசமங்கையில் இலந்தையை தலமரமாகக் கொண்ட சபையில் ஒரு மரகத நடராசர் எழுந்தருளி உள்ளார். மகாபிடேக காலங்கழித்து, ஏனைய காலங்களில் சந்தனக் காப்பு இடப் பெற்றிருப்பார். இங்கு உச்சிக்காலப் பூசை சிறப்பு. தலமரமாகிய இலந்தையின் பழங்கள் மிகவும் மருத்துவ சத்தி வாய்ந்ததாகக் கூறுவார்.

கொங்கு நாட்டுக்கு கோவை மாவட்டில் உள்ள புராதன தலமாகிய பேரூரில் நடேசருக்கு நீள் சதுரமான பெரிய மண்டபம் உண்டு. ஒவ்வொரு தூணிலும் அழகான சிலைகள் வடிக்கப் பட்டுள்ளன. கோயிலுக்கு அருகே காஞ்சி என்ற சிற்றாறு பாய்கிறது. சுந்தரர் தமது “கோயில்” பதிகத்தில், பேரூரைக் குறிப்பிடுகிறார். “மீகொங்கில் காஞ்சிவாய பேரூர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே” என்று பாடுகிறார். தில்லை நடராசர் எழுந்தருளி உள்ள கோயிலின் உள்ளே சென்று வலம்வந்து கும்பிடலாம். (சிவதாண்டவம், அனவரத தாண்டவம், ஆனந்த தாண்டவம்)