திருப்பூந்துருத்தி திருமடம்

இது திங்களும், ஞாயிறும் தோயும் திருமடம். இத்திருமடத்தின் அகன்ற திருமுற்றத்தில், இரவில் திங்களும், பகலில் ஞாயிறும், நிலவொளியும், வெயிலும் பரப்பினர். இத்திருமடம் நம் சைவசமய பரமாசாரியராலே செய்யப்பட்ட தனிப் பெருமை உடையது. இத்திருமடத்தில் நமது ஆசாரிய மூர்த்திகள் ஆகிய நாவுக்கரசர், பலகாலம் எழுந்தருளி, அமர்ந்து சிவபூசை, சிவயோகம் முதலிய தவங்களை செய்தருளினார்கள். அவ்வாறு பூசித்த இடமும், யோகத்தமர்ந்த இடமும், அடையாளங்கள் காண இன்றும் உள்ளன. அன்று அரசுகள் அத்திருமடத்தில் சிவயோகத்தமர்ந்து எழுந்தருளி இருந்த சிறு அறையில், அவரது திருமேனி எழுதருளப் பெற்று, நியமமாக வழிபாடு நடைபெற்று வருகின்றது.

இத்திருமடத்திலே தான் சம்பந்தரும், நாவுக்கரசருடனே பலநாள் தங்கி, உடன் அமர்ந்து, அளாவி இருந்தருளினார்கள். பிள்ளையார் தென்னாடாகிய தமிழ்நாட்டில் (பாண்டி நாட்டில்) எழுந்தருளி, சைவத் தாபனம் செய்த சிறப்பும், அரசுகள் வடநாடாகிய தொண்டை நாட்டிலும், அப்பால் உள்ள வடதேசத்திலும் போந்து, பின் திருக்கயிலைக் காட்சி கண்டருளிய சிறப்பும், ஒருவருக்கொருவர் இத்திருமடத்தில் இருந்து பேசி, அளவளாவிக் களித்தனர். அது காரணமாக, அப்பர் பின்னர் தென்னன் நாடு சென்றருளவும், பிள்ளையார் திருத்தொண்டை நன்னாடு சென்று, அங்கம் பூம்பாவையாக்கிய பின்னர், திருமணத்துக்கு எழுந்தருளவும் உள்ள தெய்வ நிகழ்சிகள் உளவாயின.

இற்றைக்கு சில ஆண்டுகளின் முன், தஞ்சை வெற்றிவேல் அச்சக உரிமையாளர், சைவப்பெரியோர் பக்கிரிசாமிப் பிள்ளையவர் அவர்கள், தமது சொந்தப் பணமாக, பெருந்தொகை செலவு செய்து, அத்திருமடத்தை பழமைபோல் திருத்தி அமைத்துள்ளார்.