அணிஅண்ணாமலை (அடியண்ணாமலை)

திருவண்ணாமலை அடிவாரச் சுற்று 13 கி.மீ (8 மைல்) நீளம் உள்ளது. இதில் 8 கி.மீ தூரத்தில், அணிஅண்ணாமலை உண்டு. இதனை அடியண்ணாமலை என்றும் கூறுவார்.

அளவான கோயில். முழுவதும் கருங்கல் திருப்பணி. சுவாமி, அம்பாள் சந்நிதிகள் இரண்டும் கோயிலின் உள்ளே, அருகருகே உண்டு. இரண்டும் கிழக்கு பார்த்தபடி அமைந்துள்ளன.

திருவண்ணாமலையை வலம் வருதல் பெரும் புண்ணியம். கார்த்திகைப் பெருவிழாவின்போது ஆயிரக்கணக்கோர் வலம் வருவர். அப்போது அணிஅண்ணாமலையையும் தரிசிப்பர்.

“ஓதிமாமலர்கள் தூவி” என்ற திருநேரிசைப் பதிகத்தை, திருநாவுக்கரசு நாயனார், இங்கு பாடியதாக, சில ஆய்வாளர் கூறுவார். மாணிக்கவாசக சுவாமிகள், “திருவெம்பாவை”யை இவ்விடத்தில் இருந்துதான் பாடினார் என்பர். அவர் இருந்து பாடிய இடத்தில், அவருக்கென ஒரு தனிச் சிறு கோயில் உண்டு. அங்கே உள்ள கல்வெட்டில் இச்செய்தியை காணலாம்.

இவ்விடத்தில் மலைவாழ் மக்கள், தேனும், தினைமாவும் விற்பார்கள். இங்கு இயற்கையின் எழில் காட்சி கண்களை மிகவும் கவரும். “அருவி பொன் சொரியும் அண்ணாமலை” என்ற தேவார சொற்றொடரின்படி, பொன் கொழிக்கும் மலையின் வீழ் அருவிகள், உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

மலையை வலம் வருதலும், இக்கோயிலை தரிசிப்பதும் தவறாமல் செய்யவேண்டியவையே. தேவாரப் பதிகங்கள் தனியே இல்லை.