கஞ்சானூர் (கஞ்சாறு)

இறைவர் : ஜடாநாதர்
இறைவி : புண்ணிய வர்த்தனி, பிருகந்நாயகி, கல்யாணசுந்தரி

ஏயர்கோன் கலிக்காம நாயனாருக்கு பெண் தந்த மானக்கஞ்சாற நாயனார் அவதாரம் செய்த ஊர். இன்று ஆனந்த தாண்டபுரம் எனப்படுகிறது. கோயில் பஞ்சவடீசுவரர் கோயில் என்று அழைக்கப் படுகிறது. கஞ்சானூரில் வாழ்ந்த ஆனந்தமகா முனிவர் என்பவர், இங்கிருந்து சிதம்பரத்துக்கு சென்று கேவிக்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் இரவு கடும் புயலோடு, பெருமழை உண்டான படியால், அவரால் நியதிப்படி சிதம்பர நடராச தரிசனத்துக்கு செல்ல முடியவில்லை. மழையும், புயலும் விரைவில் தணிந்துவிடும் என்று எண்ணி, நெடுநேரமாகக் காத்திருந்தும் அவை குறைந்த பாடில்லை. இதற்கிடையில் பொழுதும் விடிந்து விட்டது. அதனை உணர்ந்த முனிவர், “நியதிப்படி கடந்த இரவு சிதம்பரம் போய் தாண்டவ தரிசனம் செய்ய முடியவில்லையே! என் பிறவி வீணாகி விட்டதே” என்று பெருங் கவலை கொண்டார். இனி இறப்பதே கதி என்று உறுதி கொண்டு, அங்கு நின்ற பவளமல்லிகைக்கு சென்று, கழுத்தில் சுருக்கிட்டு இறக்க முயன்றபோது, தில்லை அம்பலவாணர் காட்சி கொடுத்து, “கவலைப்படாதே. உனக்கு என்னுடைய தில்லைத் திருநடனக் காட்சியை இங்கேயே தரிசிக்கத் தருகிறேன்” என்று, தம் ஆனந்த தாண்டவத்தை ஆடிக்காட்டினார். இதனாலே தான் இத்தலம் ஆனந்த தாண்டவபுரம் என்னும் பெயர் கொண்டது. இங்கு இறைவர் ஆடியது ‘முகமண்டல ஆனந்த தாண்டவம்’ ஆகும். பரத்வாஜ முனிவருக்கு இறைவனும், இறைவியும் தமது திருக்கல்யாணக் கோலக் காட்சி தந்ததும் இங்குதான்.

இங்கு பிறந்து, வாழ்ந்த கஞ்சாறர் என்பவர், குழந்தைச் செல்வம் இல்லாமல் வருந்தி தவம் கிடந்தார். அம்பிகையின் அநுக்கிரகத்தினால் அவர் எழுபது வயதாய் இருக்கும்போது, ஒரு பெண் குழந்தை பிறந்தது. அம்பாளின் திருவருளால் பிறந்தமையால், அதன் திருமுடியில் இறைவன் விருப்பம் வைத்தான். அவர் விரும்பியபடியே தம் பொற்கொடியை, ஏயர்கோன் கலிக்காமன் என்பார் கை பிடிக்கவரும் மணநாள் நல்லோரையில், இறைவர் மகாவிரத வடிவம் கொண்டு, மாறனார் வீடு போய், பொற்கொடியின் கூந்தலைக் கேட்க, அவர் உடனே வாள் கொண்டு அதனை அரிந்து, சிவலோகம் எய்தினார். புதல்வியின் கூந்தலும் முன்போல் ஆகியது.

கோயிலில் கஞ்சாறர் (வாளுடன்), ஜடாநாதர், கஞ்சாறர் மனைவியார், புதல்வியார், கலிக்கம்பர், புண்ணிய வர்த்தனி முதலியோர் விழாத்திருமேனிகள் உண்டு. சில ஆண்டுகளின் முன், சிதைந்து கிடந்த இவற்றை தோண்டி எடுத்தனர் என்பர் சிவாசாரியார்.

பயண வசதிகள் பல உண்டு. மயிலாடுதுறை-சிதம்பரம் இருப்புப்பாதை வழி, ஆனந்த தாண்டவபுரம் நிலையத்தில் இருந்து ½ கி.மீ. சீகாழி-மயிலாடுதுறை இருப்புப்பாதையில் பல வண்டிகளும், சிதம்பரம் -சீகாழி-மயிலாடுதுறை சாலைவழி பல பேருந்துகளும் ஓடுகின்றன. இங்கிருந்து திருப்புன்கூர், திருப்பெருமங்கலம் முதலிய தலங்களை கால்நடையாகவே சென்று அடையலாம்.