மதங்கசூளாமணியார்

இறைவன் புகழை யாழில் அமைத்து வாசிப்பதிலும், மிடற்றிப் பாடுவதிலும் சிறந்து விளங்கிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்பவர் சோழ நாட்டிலே, திருஎருக்கத்தம் புலியூரிலே வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒத்த வலிமை உடையவராகிய இசைப்பாட்டு மதங்கசூளாமணியார் என்னும் கற்பிற் சிறந்த மனைவியார் இருந்தார். அவர் யாழ்ப்பாண நாயனார் மதுரை சென்று, ஆலவாயில் அவிர்சடைக் கடவுளின் கோயிலின் புறத்தே நின்று பாடிப் பரவியபின், திருவாரூர் சென்று, பூங்கோயிலின் வெளியே நின்று பாடியபின், திருஞானசம்பந்தப் பிள்ளையார் கழல் வணங்க சண்பநகர் வந்தபொழுது, கூட எழுந்தருளினார். அங்கு இவர்கள் சென்றடைந்த செய்தி கேட்டு, ஆளுடைய பிள்ளையார் விரைந்து சென்று, நேர்கொண்டு, “ஐயர்! நீர் உளமகிழ இங்கணைந்த உறுதி உடையோம்” என்றார். அங்கு பிள்ளையார் ஆஞ்ஞைப்படி, பாடினியார் பாட, நீலகண்ட நாயனார் யாழ் வாசிக்க, ஞானபோனகர் மகிழ்ந்தார். இங்ஙனம் பிள்ளையாருடனே அவர் செல்லும் இடமெல்லாம் இருவரும் உடன் சென்று, யாழ் வாசித்தும், இசை பாடியும் பணிந்தனர். ஈற்றில் திருப்பெருமறை நல்லூரிலே, பிள்ளையாரின் திருமணத்திலே தோன்றிய சோதியிலே, அங்கிருந்த யாழ்ப்பாணரோடும், ஏனையோரும் சிவசோதியுள் கலந்தனர்.

திருநாள் : வைகாசி மகம்