1. திருநீலகண்ட நாயனார்


இவ்வுலகத்திலே உள்ள ஒவ்வொருவரும் அவரவர்க்கு உரிய குலத்தொழிலையும், குல ஒழுக்கத்தையும் கைவிடாமல் பின்பற்றி வாழவேண்டும். தொழில் செய்வோர், அத்தொழிலை, தம் சீவனத்துக்கு அவசியமான அளவுக்கே அமைத்துக்கொண்டு, ஏனைக்காலத்தையும், முயற்சியையும், தேடிய பொருளையும், சிவபெருமான் பாலிலும், சிவனடியார் பாலிலும் செலுத்தக் கடவர். இறைவனது திருநீலகண்டம் யாவராலும் பாராட்டி, பத்தி செய்தற்குரியது. இறைவன் ஏந்திய திருவோடு மிகப்பெருமை வாய்ந்தது. சிவஞானிகளும் தாங்கும் திருவோடும் அத்தகையதே. காமம் கொடியது. அதன் வழிப்பட்டோர்க்கு அது எல்லாத் தீமைகளையும் விளைக்கும். துன்பங்களையும் தரும். மனைவி சொன்ன சூதினால் (செய்த சத்தியத்தினால்) இளமை மிக்க திருநீலகண்ட நாயனாரும், மனைவியாரும் ஒரே வீட்டில் வாழ்ந்து, இல்லறம் நடத்தி வந்தும், இளமைப் பருவத்தினராய் இருந்தும், காமத்தை அறவே துறந்து, ஆயுள் முழுவதும், திருவாணையினாலே காத்த அரிய பெருமையை உலகம் போற்றும். (மனைவியிடத்தும் விதிவழியே நின்று மக்கட்பேற்றினைக் குறித்தே மெய்யுறு புணர்ச்சி கொள்ளத்தக்கது). சிற்றின்பம் சிறிது; பேரின்பம் பெரிது. இறைவனிடத்தே பதித்த அன்புக்காக சிற்றின்பம் துறந்தவர் என்றும் அழியாப் பேரின்பம் அடைவர். இவ்வாறு வாழ்ந்து, ஈற்றில் இறைவன் காட்சி கொடுத்து, “இவ் இளமையுடன் என்றும் எம்பால் இருப்பீர்களாக” என்று அருள் செய்தவர்.

                  *                                                              *                                                              *

சிதம்பரம் என்னும் திருத்தில்லையம்பதி சோழநாட்டிலே காவிரியின் வடகரையிலே உள்ள முதலாவது சிவத்தலம். அங்கே வேட்கோவர் (குயவர்) குலத்திலே சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவராய் ஒருவர் இருந்தார். அவர்தம் சிவபத்தியின் மிகுதியினால் எப்போதும் “திருநீலகண்டம்” என்று உச்சரித்து வந்தமையினால், அவரை எல்லோரும் “திருநீலகண்டர்” என வழங்கினர். இவர், தம் இளம் மனைவியோடு இல்லறம் நடாத்திவரும் வேளையில், தம் ஒழுக்கத்தில் இவர் தவறி நடக்க, மனைவியார் ஊடினார். அவர் அவ்வூடலைத் தீர்க்கத் தலைப்படும்போது, மனைவியார், “எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்” என ஆணையிட்டனர். “எம்மை” என்று மனைவியார் குறிப்பிட்ட படியால், “யான் இனி எந்தப் பெண்ணையும் தீண்டேன்” என்று சபதம் செய்தார். அன்று தொடக்கம் அவ்விருவரும் மெய்யுறு புணர்ச்சி இன்றியும், நிகழ்ந்தவற்றை அயலவர் அறியாதும் வாழ்ந்து வந்தனர். இதனை உலகினர்க்கு காட்ட இறைவர் திருவுள்ளம் கொண்டார்.

இறைவர் இந்நோக்கதுடன் ஒருநாள் ஒரு சிவயோகியாராக திருவுருக் கொண்டு, குயவனாரிடம் சென்று, தம் கையில் இருந்த திருவோட்டை அவரிடம் கொடுத்து, “இதனை பாதுகாப்பாக வைத்திருந்து, நாம் கேட்கும்போது தருக” என்று சொல்லி, அதனைக் கொடுத்து சென்றார். சிலநாள் கழிய, யோகியார் அந்த ஓட்டினை அங்கிருந்து மறையச் செய்தார். பின் அவர் நீலகண்டரிடம் சென்று, தம்முடைய திருவோட்டினைத் தரும்படி கேட்டார். குயவனார் உடன்பட்டு, எடுக்க உள்ளே சென்றார். தாம் அதை வைத்த இடத்திலும் தேடினார். காணமுடியவில்லை. அதனை எங்கும் தேடியும் காணாது திகைத்து நின்றார். அவர் மனம் மிக வருந்தி, சிவயோகியாரிடம், “ஓடு கெட்டுவிட்டது. அதற்குப் பதில் வேறு ஓடு தருகிறேன்” என்றார். அதற்கு சிவயோகியார், “நான் தந்த ஓட்டினை நீ களவு செய்துவிட்டாய். ஓடு கெட்டது உண்மையாயின், உன் புதல்வன் கையைப் பற்றித் திருக்குளத்துள் மூழ்கி, சத்தியம் செய்வாய்” என்றார். வேட்கோவர் தமக்கு பிள்ளை இல்லாத நிலையை கூற, “அப்படியாயின் உன் மனைவி கையைப்பிடித்து, மூழ்கி, சபதம் செய்” என்றார் சிவயோகியார். தாங்கள் இருவரும் செய்துகொண்ட ஒரு சபதம் காரணமாக அங்ஙனம் செய்ய இயலாமைக்கு வருந்தி, விளக்கினார். சிவயோகியார் கோபம் கொண்டு, தில்லைவாழ் அந்தணர்களிடம் முறையிட, அவர்கள் சிந்தித்து, ஒரு ஆஞ்ஞையிட்டனர். “நீங்கள் இருவரும் நீரில் மூழ்கி, சபதம் செய்ய இசைந்து, திருப்புலீச்சரம் சென்று, ஒரு மூங்கில் தண்டு கொண்டு, அதன் இருதலையில் இருவரும் பற்றி, மூழ்கி, சத்தியம் செய்வீர்” என்றார்கள். இவ்வாஞ்ஞைப்படி அவர்கள் இருவரும் குளத்தில் மூழ்கி, வெளியே கரையேறும்போது, தாங்கள் இருவரும், இந்நீண்ட காலத்தில் இழந்த இளமை நலனைப் பெற்று விளங்கினர். சிவயோகியார் மறைந்தருளினார். வானத்திலே சிவபெருமான், உமாதேவியாரோடு இடபவாகனத்தில் இருவருக்கும் காட்சி கொடுத்து, “இவ்விளமை நீங்காமல் எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்களாக” என்று அருள் செய்து, இருவரையும் சிவலோகத்தமர்த்து அருளினார்.

(‘அயல் அறியாது வாழ்வதே சிறந்தது’ என்ற குறிக்கோளே இங்கு விளக்கப்பட்டது)

திருநாள் : தை விசாகம். அன்று அவருடைய குலத்தவர் திருப்புலீச்சரத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்து, தங்கத்தால் செய்யப்பட்ட திருவோடு, மூங்கில் தண்டு முதலியவற்றுடன் இறைவர், சிவயோகியார், வேட்கோவர், மனைவி முதலியோரை திருவீதி உலாச் செய்வர். பின் சிதம்பரம் கிழக்கில் உள்ள திருநீலகண்டர் மடத்தில், அடியார் எல்லாருக்கும் அமுது அளித்தல் நிகழும். திருப்புலீச்சரம் கோயில், ‘இளமையாக்கினார் திருக்கோயில்’ என்றும், குளம் ‘இளமையாக்கினார் குளம்’ என்றும் வழங்கப்படுகின்றன. குளத்தின் படிக்கட்டை அணைக்கும் சுவரில், குயவரும், மனைவியும் முன் இருந்த இளமைக் கோலமும், சபதம் செய்யும் பொழுது இருந்த வயோதிபக் கோலமும் விளங்க, இருவரது புடைச் சித்திரங்கள் இருக்கின்றன.

இக்கோயிலில் தம் தலைமயிரால் விளக்கு எரித்து, சிவபதம் எய்திய கணம்புல்ல நாயனாரின் திருமேனியும் உண்டு.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : குயவர்
நாடு : சோழநாடு
ஊர் : திருத்தில்லை (சிதம்பரம்)
குருபூசை / திருநாள் : தை - விசாகம்

ஒரே பார்வையில் ...
“திருநீலகண்டம்” என்று எப்போதும் உச்சரிப்பதனால் அவரை எல்லோரும் நீலகண்டர் என வழங்கினர். இளமை மீதூர, பரத்தையரோடு இன்பத்தில் மூழ்கினார். இதையறிந்த அருந்ததி அன்னாள், “எம்மைத் தீண்டுவாராயின் திருநீலகண்டம்” எனச் சபதம் செய்தனர். மனைவியின் சபதத்துடனும், அயல் அறியாவண்ணத்துடனும், அவளைத் தீண்டாது, இளமையிலும், முதுமையிலும் வாழ்ந்து, திருவருளின் திருவிளையாட்டால் இளமை பெற்று, சிவலோகம் எய்திப் பெருவாழ்வு பெற்றனர்.