10. குங்கிலியக்கலய நாயனார்


சிவாலயங்களிலே சிவசந்நிதானத்தில் நறுமணம் மிக்க குங்கிலியத் தூபம் இடல் சிறந்த சிவபுண்ணியம். சிவபெருமானுடைய திருவடிகளை மெய்யன்போடு பற்றுவார்க்கு இறைவர் திருவருள் கிடைக்கும். பத்தியுடன் சிவப்பணிகள் செய்யும்போது வறுமை, வற்கடம் முதலியன வந்துற்ற போதிலும், சிந்தை சிதறாது சிவபுண்ணியங்களை செய்தால் சிவபெருமான் பேரின்பப் பெருவாழ்வு நல்குவர். இரண்டு நாள் பசியோடு வருந்திய மனைவி, மக்கள் துன்பம் துடைக்க, மனைவி தந்த தாலியை விற்று, நெல் வாங்கச் சென்ற கலயனார், வழியிலே ஒரு வணிகன் நல்ல குங்கிலியம் கொண்டு வருவதைக் கண்டார். அதனை விரும்பி, தாலியை கொடுத்து, குங்கிலியத்தை வாங்கி, சிவாலயத்தில் சேர்த்து மகிழ்ந்தார் கலயனார். சிவனடியார்களை பூசித்து, அவர்களுக்கு ஏற்றபடி இனிய திருவமுது ஊட்டி, மாகேசுர பூசை செய்து வழிபடுதல் சிறந்த சிவதருமம். அப்போது சிவன் அவ்வடியார்களின் உள்ளே இருந்து பூசனையையும், அமுதினையும் ஏற்று, மகிழ்ந்து அருள் புரிவர். அன்பால் நினைந்து சிவனை வழிபடும் அடியார்கள் எவரேயாயினும், அவர்களது எளிமையையும், சிறுமையையும் பார்த்து, சிவன் அவர்களுக்கு எளியனாக, திருமுடி சாய்த்தும், அவர்கள் வழிபாட்டை ஏற்று அருளுவர். குரு, லிங்க, சங்கமம் வழிபாடு செய்தற்குரிய இடங்களாம். இம் மூன்றில் இருந்து சிவபெருமான் அவ்வழிபாடுகளை ஏற்று அருளுவர். இவ்வண்ணம் சைவத்திரு பொலிய குங்கிலியக்கலய நாயனார் வாழ்ந்து, சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

                  *                                                              *                                                              *

சோழ நாட்டிலே, திருக்கடவூர் என்றொரு தலம் உண்டு. அங்கே கலயனார் என்ற ஒரு அந்தணனார் வசித்து வந்தார். அவர் சிவனடி பேணும் சிந்தையராய், அத்தலத்திலே எழுந்தருளிய அமிர்தகடேசுவருக்கு, விதிப்படி குங்கிலியத் தூபம் இடும் திருப்பணியை நியமமாக செய்து வந்தார். செல்வம் பொருந்திய காலத்திலே அன்றி, வறுமை வந்துற்ற காலத்தும் அப்பணியை குறைவிடாது செய்து வந்தார். தாமும், மனைவி, மக்களும் வறுமையால் வாடி, பசிக்கொடுமையால் வருந்தி இருக்கும்போது, மனைவியார் திருமாங்கலியத்தை அவர் கையில் கொடுத்து, அதை விற்று, கிடைக்கும் பொருளைக்கொண்டு நெல் வாங்கிவர வேண்டினார். கலயர் தாலியைக் கொண்டு செல்லும்போது, எதிரே ஒரு வணிகன் குங்கிலியப் பொதியோடு வருவதைக் கண்டு, மகிழ்ச்சி அடைந்து, அவனிடம் தாலியக் கொடுத்து, குங்கிலியத்தைப் பெற்று, திருக்கோயில் சென்று, தூபம் இட்டு, அங்கே தங்கியிருந்தார். மனைவி, மக்கள் பசியால் அயர்ந்து தூங்கினர். அப்போது சிவபெருமான் அவர் இல்லத்தை நெற்குவை, பொற்குவைகளால் நிரப்பி, அவர் கனவில் தோன்றி, தாம் செய்தவற்றை அருளிச் செய்தார். மனைவியார் விழித்தெழுந்து இறைவன் திருவருளை வியந்து, அவரைத் தொழுதார். அம்மையார் திருவமுது ஆக்கி, கணவர்க்கும், பிள்ளைகட்கும், சிவனடியார்க்கும் பரிமாறி மகிழ்ந்தனர்.

அந்நாளில் திருப்பனந்தாள் என்னும் சிவத்தலத்திலே, சிவபத்தை ஆகிய தாடகை என்னும் பெண், தம் இறை வழிபாட்டில் மாலை சாத்தும்போது, ஆடை அவிழ, இறைவர் தம் சிரசை சாய்த்து, அப்பிடியே இருந்து அருளினார். அந்நாட்டு மன்னராகிய சோழர், சாய்ந்திருந்த சிவலிங்கப் பெருமானை நேர் நிறுத்தி வழிபட விரும்பினார். சிவலிங்கத்தை நேர் நிறுத்த தம் சேனை, யானைப் படை முதலிய சாதனங்களை உபயோகித்தும், அது இயலாமை கண்டு மிக வருந்தினார். இதனை அறிந்த கலயனார், கடவூரின்றும் நீங்கி, திருப்பனந்தாள் சென்றடைந்தார். மன்னவரின் மனக்கவலையை நீக்க திருவுளம் கொண்டார். ஒரு கயிற்றினால் தம்முடைய கழுத்தையும், சிவலிங்கத் திருமேனியையும் பிணைத்து இழுத்தார். இவர்தம் அன்பினை உலகுக்குக் காட்ட இறைவர் தாமே நிமிர்ந்து அருளினார்.

கலயனார் மீண்டு, கடவூரில் இருக்கும்போது திருஞானசம்பந்தப் பிள்ளையாரும், திருநாவுக்கரசரும் அவர் இல்லத்துக்கு எழுந்தருளினார்கள். அப்போது கலயனார் மிக மகிழ்ச்சி அடைந்து, அவர்களை எதிர்கொண்டு அடைந்து, தமது இல்லத்தில், அவர்களது பெருமைக்கு ஏற்ப, திருவமுது அளித்து, மகிழ்ந்தார். இங்ஙனம் சிவனுக்கும், சிவனடியார்க்கும் ஏற்ப பல பணிகள் செய்து, சிவபெருமானது திருவடி நீழலை அடைந்தார்.

மேலதிக குறிப்புக்கள்
குலம் : அந்தணர்
நாடு : சோழநாடு
ஊர் : திருக்கடவூர்
குருபூசை / திருநாள் : ஆவணி - மூலம்

ஒரே பார்வையில் ...
சிவபத்தார். திருக்கோயிலிலே சுகந்த தூபம் இடும் வழக்கம் உடையவர். வறுமை வந்துற்ற போது, தூபத்துக்கு குங்கிலியம் பெறப் பொருள் இல்லாது வருந்தியிருக்கும் போது, வீட்டிலே மனைவி, மக்கள், மற்றுமுள்ளோர் பசியால் வருந்துவதைக் கண்ட மனைவியார், தம் தாலியைக் கணவனாரிடம் கொடுத்து, நெல் வாங்கிவரக் கொடுக்க, அவர் வழியிலே குங்கிலியம் விற்பானைக் கண்டு, அவனிடம் கொடுத்து, குங்கிலியம் பெற்றுக் கோவிலுக்குப் போய் தூபம் இட்டவர். சம்பந்தரையும், அப்பரையும் தம் வீட்டுக்கு அழைத்து, அவர்களுக்கு அமுது அளிக்கும் பெரும்பேறு பெற்றவர். தாடகே அரசன் யானைப்படை முதலியவற்றாலே நிமிர்த்த முடியாதிருந்த சிவலிங்கத்துடன் தன் கழுத்தை ஒருகயிற்றால் பிணைத்து, இழுத்து, நிமிர்த்தி முத்தி அடைந்தவர்.